என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

திருப்பூர் கலிமுல்லாவுக்கு கோட்டை அமீர் மதநல்லிணக்க பதக்கம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
- சிறந்த காவல் நிலையத்திற்கான கோப்பையை மதுரை மாநகரம் முதலாவதாக தட்டி சென்றுள்ளது.
- 2-ம் பரிசு திருப்பூர் நகரத்துக்கும், 3-ம் பரிசு கோவை மாவட்டத்திற்கும் கிடைத்தது.
சென்னை:
மதநல்லிணக்கத்திற்காக பாடுபட்டு உயிர்நீத்த கோட்டை அமீர் பெயரால் ஒவ்வொரு ஆண்டும் தமிழக அரசு சார்பில் பதக்கம் வழங்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் இந்த ஆண்டுக்கான கோட்டை அமீர் மதநல்லிணக்க பதக்கத்தை திருப்பூர் மாவட்டம் பூநூல் காடு 3-வது வீதியில் வசித்து வரும் மு.கலிமுல்லா என்பவருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குடியரசு தின விழாவில் வழங்கி கவுரவித்தார்.
அவருக்கு ரூ.5 லட்சத்திற்கான காசோலையும், சான்றிதழும் வழங்கப்பட்டது. கலிமுல்லா காங்கேயன் வட்டம், கணபதிபாளையம் கிராமத்தில் தனக்கு சொந்தமான 3 சென்ட் அளவுள்ள நிலத்தை விநாயகர் கோவில் கட்டுவதற்காக தானமாக வழங்கி உள்ளார். கோவில் கட்டுவதற்காக ரூ.3 லட்சம் நன்கொடையும் அளித்துள்ளார்.
இவர் ஆர்.எம்.ஜே. ரோஸ் கார்டன் முஸ்லீம் சமாத் மசூதி சபா கமிட்டி தலைவராக செயல்பட்டு வருகிறார். 60-க்கும் மேற்பட்ட முறை ரத்த தானம் செய்துள்ளார். இவரை பாராட்டி கவுரவிக்கும் வகையில் கோட்டை அமீர் மதநல்லிணக்க பதக்கம் வழங்கப்பட்டு உள்ளது.
அதிக உற்பத்தி திறன் பெறும் விவசாயிக்கான வேளாண்மை துறையின் சி.நாராயணசாமி நாயுடு நெல் உற்பத்தி திறனுக்கான விருதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த விவசாயி ஜி.வீரமணிக்கு வழங்கினார்.
விருதுடன் பரிசுதொகை ரூ.5 லட்சம், தங்கமுலாம் பூசப்பட்ட வெள்ளி பதக்கத்தையும் வழங்கினார். இந்த விவசாயி வேளாண்மை துறையின் மூலம் வழங்கப்பட்ட நவீன தொழில்நுட்ப பயிற்சிகளின் மூலமாக திருந்திய நெல்சாகுபடி முறையை நன்கு கற்று அதன் அடிப்படையில் நெல் சாகுபடியை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார்.
இவர் செய்த சாகுபடியால் ஹெக்டருக்கு 14,925 கிலோ நெல் மகசூல் கிடைக்கப் பெற்றது. இது மாநிலத்திலேயே முதன்மையாக இருப்பதால் இந்த விருது இவருக்கு கிடைத்து உள்ளது.
போலி மதுபான ஆலை, கள்ளச்சாராயம் கடத்தல் ஆகியவற்றை கண்டறிந்து சிறப்பான நடவடிக்கை மேற்கொண்ட 5 போலீஸ் அதிகாரிகளுக்கு காந்தியடிகள் காவலர் பதக்கங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
1.விழுப்புரம் மண்டலம் மத்திய நுண்ணறிவு பிரிவு இன்ஸ்பெக்டர் பி.நடராஜன், 2.ஆரோவில் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் எம்.சத்திய நந்தன், 3. சின்ன சேலம் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் எஸ்.மணிகண்டன், 4. கடலூர் மாவட்டம் புத்தூர் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் கே.நடராஜன், 5. சேலம் மாவட்டம் மத்திய நுண்ணறிவு பிரிவு ஏட்டு வி.பி.கண்ணன்.
சிறந்த காவல் நிலையத்திற்கான கோப்பையை மதுரை மாநகரம் முதலாவதாக தட்டி சென்றுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்ஸ்பெக்டர் பூமிநாதனிடம் கோப்பையை வழங்கினார்.
2-ம் பரிசு திருப்பூர் நகரத்துக்கும், 3-ம் பரிசு கோவை மாவட்டத்திற்கும் கிடைத்தது. இதற்கான கோப்பையை இன்ஸ்பெக்டர் பிரேமா, சின்னகாமனன் பெற்றுக் கொண்டனர்.






