

தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவியேற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், மரியாதை நிமித்தமாக மூத்த அரசியல் கட்சிகளை தலைவர்களை சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில் சட்டசபையில் எம்.எல்.ஏ-வாகப் பதவியேற்ற பிறகு, ஆழ்வார்பேட்டையில் உள்ள வீட்டில் முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார். இந்த சந்திப்பின்போது இருவரும் பரஸ்பரம் சால்வை அணிவித்து மரியாதையை வெளிப்படுத்தி கொண்டனர்.
தொடர்ந்து மதிமுக தலைவர் வைகோவையும் இன்று சந்திக்க திட்டமிட்டுள்ளார். அதனையடுத்து விசிக தலைவர் திருமாவளவனையும் சந்திக்க உள்ளார். இதனையடுத்து நாளை பிரதமர் மோடியையும், காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியையும் சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது.
சமீபத்தில் நடைபெற்று முடிந்த 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் தவெக 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விசிக மற்றும் ஐயூஎம்எல் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் விஜய்க்கு 120-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு கிடைத்தது.
இதனைத் தொடர்ந்து ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரைச் சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரிய விஜய், தமிழ்நாட்டின் புதிய முதலமைச்சராகப் பதவியேற்றுள்ளார். இந்நிலையில் மரியாதை நிமித்தமாக மூத்த தலைவர்களை சந்தித்து வருகிறார்.