

கடந்த 2008-ம் ஆண்டு தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய அமைச்சராக இருந்த ஐ.பெரியசாமி, தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி வீட்டுவசதி வாரியத்துக்குச் சொந்தமான வீட்டை அப்போதைய காவல் அதிகாரி ஜாபர் சேட், அவரது மனைவி பர்வீன், மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பாதுகாவலராக இருந்த கணேசன் உள்ளிட்டோருக்கு, ஒதுக்கியதில் முறைகேடு செய்ததாக ஐ.பெரியசாமி உள்ளிட்டோர் மீது கடந்த 2012-ம் ஆண்டு அதிமுக ஆட்சியின்போது லஞ்ச ஒழிப்புத் துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் இருந்து அமைச்சர் ஐ.பெரியசாமியை விடுவித்து சென்னை எம்.பி, எம்.எல்.ஏ.-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் கடந்த 2022-ம் ஆண்டு மார்ச் மாதம் உத்தரவிட்டது.
இந்த உத்தரவை மறு ஆய்வு செய்யும் வகையில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தார். தொடர்ந்து அவர் மதுரை உயர்நீதிமன்ற கிளைக்கு மாற்றப்பட்டார்.
கடந்த 2008-ம் ஆண்டு திமுக ஆட்சியின்போது தமிழ்நாடு அரசின் விருப்புரிமை ஒதுக்கீட்டின் கீழ் அப்போது ஐபிஎஸ் அதிகாரியாக இருந்த ஜாபர் சேட்டின் மனைவி பர்வீன் உள்பட சிலருக்கு திருவான்மியூரில் 3457 சதுர அடி மற்றும் 4763 சதுர அடி வீட்டுமனைகளை தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் ஒதுக்கீடு செய்தது.
இந்த ஒதுக்கீட்டில் முறைகேடுகள் நடந்துள்ளதாகக்கூறி, அப்போதைய வீட்டுவசதித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, ஜாபர்சேட், அவரது மனைவி பர்வீன் உள்பட 7 பேர் மீது லஞ்ச ஒழிப்புத் துறை, கடந்த 2013-ம் ஆண்டு அதிமுக ஆட்சியின் போது வழக்குப்பதிவு செய்தது.
இந்த வழக்கின் அடிப்படையில் ஐ.பெரியசாமி உள்ளிட்ட 7 பேருக்கு எதிராக சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச்சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறை 2020-ம் ஆண்டு வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி ஐ.பெரியசாமி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது.
இது தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது அமைச்சர் பெரியசாமி சார்பில் ஆஜரான வழக்கறிஞர், லஞ்ச ஒழிப்புத் துறை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருந்த 7 பேர் மீதான வழக்குகளையும் சென்னை உயர் நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும், இந்த முறைகேட்டில் குற்றச்சதியும் நிதி இழப்போ இல்லை எனக்கூறி, லஞ்ச ஒழிப்புத்துறை பதிவுசெய்த வழக்கை ரத்துசெய்துள்ள நிலையில், அமலாக்கத்துறை பதிவுசெய்துள்ள இந்த வழக்கு நிலைக்கத்தக்கதல்ல என வாதிட்டார்.
இந்நிலையில், இந்த வாதத்தை ஏற்றுக்கொண்ட தலைமை நீதிபதி அமர்வு, அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு எதிராக அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கை ரத்துசெய்து உத்தரவிட்டது.