சென்னை குடிநீர் ஏரிகளில் 9½ டி.எம்.சி. தண்ணீர் இருப்பு - அதிகாரிகள் தகவல்

தற்போது வெயில் சுட்டெரித்து வருவதால் நகரில் தண்ணீர் தேவை அதிகரித்து உள்ளது. இதனால் குடிநீர் ஏரிகளில் தண்ணீர் இருப்பு வேகமாக குறைந்து வருகிறது.
சென்னை குடிநீர் ஏரிகளில் 9½ டி.எம்.சி. தண்ணீர் இருப்பு - அதிகாரிகள் தகவல்
Published on

சென்னை நகர மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம், கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை மற்றும் கடலூர் மாவட்டத்தில் உள்ள வீராணம் ஏரிகள் உள்ளன.

இந்த ஏரிகளில் மொத்தம் 13 டி.எம்.சி. தண்ணீரை சேமித்து வைக்கலாம். கடந்த ஆண்டு வடகிழக்கு பருவ மழையின் போது நல்ல மழை பெய்ததால் குடிநீர் ஏரிகளில் தண்ணீர் இருப்பு அதிகரித்தது.

இதனால் குடிநீர் ஏரிகளில் போதுமான அளவு தண்ணீர் இருப்பு உள்ளது. மேலும் கிருஷ்ணா தண்ணீர் ஒப்பந்தப்படி ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்தும் பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது.

இந்த நிலையில் தற்போது வெயில் சுட்டெரித்து வருவதால் நகரில் தண்ணீர் தேவை அதிகரித்து உள்ளது. இதனால் குடிநீர் ஏரிகளில் தண்ணீர் இருப்பு வேகமாக குறைந்து வருகிறது.

இந்த மாத தொடக்கத்தில் குடிநீர் ஏரிகளில் மொத்தம் 10½ டி.எம்.சி. தண்ணீர் இருப்பு இருந்தது. கடும் வெப்பம் மற்றும் குடிநீர் தேவை காரணமாக கடந்த 15 நாட்களில் ஒரு டி.எம்.சி. தண்ணீர் ஏரிகளில் குறைந்து உள்ளது. இது வழக்கத்தை விட அதிகம் ஆகும். இன்று காலை நிலவரப்படி குடிநீர் ஏரிகளில் 9.6 டி.எம்.சி தண்ணீர் இருப்பு உள்ளது.

இந்த தண்ணீரை கொண்டு இந்த ஆண்டு முழுவதும் சென்னையில் தட்டுப்பாடு இல்லாமல் குடிநீர் வினியோகிக்க முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

செம்பரம்பாக்கம் ஏரியில் 3645 மில்லியன் கன அடியில் 2939 மி.கனஅடியும் (80.63 சதவீதம்), பூண்டி ஏரியில் 3231 மில்லியன் கனஅடியில் 2323 மி.கனஅடியும்(71.90 சதவீதம்), சோழவரம் ஏரியில் 1081 மி.கன அடியில் 505 மி.கன அடியும்(46.72 சதவீதம்), புழல் ஏரியில் 3300 மி.கஅடியில் 2214 மி.கன அடியும்(97.09 சதவீதம்), கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரியில் 500 மி.கனஅடியில் 428 மி.கன அடியும்(85 சதவீதம்), வீராணம் ஏரியில்1465 மி.கன அடி யில் 1207 மி.கன அடியும்(82 சதவீதம்) தண்ணீர் இருப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com