அதிமுக ராஜினாமா தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்தக்கூடாது - இன்பதுரை எம்.பி. தேர்தல் ஆணையத்தில் மனு!

சபாநாயகர் முடிவு இறுதியானதல்ல, அது நீதிமன்ற தீர்ப்பிற்குட்பட்டது.
அதிமுக ராஜிநாமா தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்தக்கூடாது - இன்பதுரை எம்.பி. தேர்தல் ஆணையத்தில் மனு!
Published on

தமிழ்நாட்டில் நடந்துமுடிந்த சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக சார்பில் வெற்றிப் பெற்றுவிட்டு, பின் ராஜினாமா செய்யப்பட்ட தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்தக்கூடாது என இன்பதுரை எம்.பி. தேர்தல் ஆணையத்தில் புகார் மனு அளித்துள்ளார்.

புகார் மனு அளித்தப் பின்பு செய்தியாளர்களை சந்தித்த அவர்.,

“அதிமுக எம்எல்ஏ-க்கள் தங்கியிருந்த இடத்துக்கு முதலமைச்சரே நேராக சென்று குதிரை பேரத்தில் ஈடுபட்டார். இதனை அனைவரும் அறிவர். இதனைத் தொடர்ந்து, அதிமுக கொறடா பேச்சை மீறி, 25 அதிமுக எம்எல்ஏ-க்கள் தவெகவுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

இதில் 21 எம்எல்ஏ-க்கள் தங்கள் முடிவை எண்ணி வருந்தி மன்னிப்பு கடிதர் கொடுத்தனர். 4 பேர் மன்னிப்பு கோரவில்லை. இந்த 4 பேரும் எக்ஸ்பிரஸ் வேகத்தில் தவெகவில் இணைந்தனர். இணைந்தமுறை தவறு. அவர்களின் ராஜிநாமாவை அவைத்தலைவர் ஏற்ற விதமும் தவறு. ராஜிநாமாவிற்கான காரணத்தை கேட்காமல் அவர் ஏற்றது தவறு.

இச்சூழலில் மன்னிக்கப்பட்டவர்களில் இருவர் சி. விஜயபாஸ்கர் (விராலிமலை) மற்றும் எம்.ஆர். விஜயபாஸ்கர் (கரூர்), இன்று தவெகவில் இணைந்துள்ளனர். அரசியலமைப்புச் சட்டத்தின் கண்ணில் மண்ணைத் தூவிவிட்டு, அதனை கேலிக்கூத்தாக்கி இன்று சென்று இணைந்துள்ளனர்.

இதனால், 6 தொகுதிகள் காலியாகின்றன. இந்த தொகுதிகளுக்கு 6 மாதங்களுக்குள் தேர்தல் நடத்தவேண்டும் என்பது சட்டம். அப்படி நடத்தப்பட்டால் அங்கு இந்த ராஜினாமா செய்தவர்கள் போட்டியிடுவார்கள் அல்லது தவெக, வேட்பாளர்களை நிறுத்தும். அப்படியெனில் அரசியலமைப்பு சட்டத்தின் 10வது அட்டவணை எதற்கு?

அப்போது அது காலியான தொகுதி அல்ல. எம்எல்ஏ-க்கள் காலமானாலோ, தகுதியின்மை உள்ளிட்ட தவிர்க்க முடியாத காரணங்களாலோதான் இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும். அதுதான் காலியான தொகுதி.

சர்ச்சைக்குரிய வகையில் காலியான தொகுதிகளில் தேர்தல் நடத்தப்படக் கூடாது என்பதுதான் அதிமுகவின் நிலைப்பாடு. இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளோம். அந்த வழக்கு வரும் 13ம் தேதியன்று விசாரணைக்கு வருகிறது.

சட்டமுறைப்படி காலியான தொகுதியாக இல்லையென்றால் அங்கு தேர்தல் நடத்தக்கூடாது என்பதற்கு என்ன சட்டம் இருக்கிறது? எனக் கேள்வி எழும். அதற்கு உதாரணங்கள் இருக்கின்றன.

வழக்கு நிலுவையில் இருந்தால் தேர்தல் நடத்தமாட்டோம் என தேர்தல் ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் கூறிய வழக்குகள் எல்லாம் உள்ளது. எங்கெல்லாம் சட்டம் இல்லையோ, அங்கு நீதிமன்ற தீர்ப்புகள் பேசும். நீதிமன்ற தீர்ப்புகளின்படி அங்கு தேர்தல் நடத்தக்கூடாது என புகாரில் குறிப்பிட்டுள்ளோம்.

மேலும், அரசியலமைப்புக்கு எதிராக சி. விஜயபாஸ்கரும், எம்.ஆர். விஜயபாஸ்கரும் செயல்பட்டதால், அவர்களுக்கு எதிராக, தனியாக தேர்தல் ஆணையம் விசாரணை நடத்த வேண்டும். தேர்தல் சுத்தமாக நடக்கவேண்டும் என்பது மட்டும்தான் ஆணையத்தின் வேலையா? அதன்பின் அந்த உறுப்பினர்களின் நடத்தை பார்க்கமாட்டார்களா?

ஏனெனில் காலியான தொகுதிகளில் இப்போது தேர்தல் நடத்த கோடிக்கணக்கில் செலவாகும். வெளிநாடுகளிலிருந்து வரவழைத்து வாக்களிக்க வைத்துவிட்டு, தற்போது வேறு கட்சிகளில் இணைவது என்பது வாக்காளர்களை அவமதிப்பதுபோல்தான். எனவே இதில் தேர்தல் ஆணையம் தலையிட வேண்டும் என அதிமுக கோரியுள்ளது.

சபாநாயகர் தீர்ப்பு இறுதியானதல்ல, அது நீதிமன்ற தீர்ப்பிற்குட்பட்டது. அரசியலமைப்புச் சட்டம் பெரியதா? இவர்கள் பெரியவர்களா? வைகோவின் பேட்டியிலேயே தமிழ்நாட்டில் குதிரை பேரம் நடப்பதை அறியலாம். ஆளுநரிடமும் மனு அளித்துள்ளோம்.” என தெரிவித்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com