

தேனி அருகில் உள்ள வீரபாண்டியில் த.வெ.க. சார்பில் முதலமைச்சர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
இதில் அமைச்சர் நிர்மல்குமார் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-
த.வெ.க. ஆட்சி அமைத்து 2 மாதங்கள் கூட முடியவில்லை. அதற்குள் நிதிநிலமையை அதிகரிக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அரசு அலுவலங்களில் லஞ்சம் இல்லாத நிலையை உருவாக்கி உள்ளோம். கடந்த தி.மு.க. ஆட்சி காலத்தில் கட்சியினர் மக்களை சந்திப்பதையே தவிர்த்து வந்தனர்.
இதனால் அவர்களை தமிழக மக்கள் தேர்தலில் புறக்கணித்தனர். இனிவரும் காலங்களிலும் தி.மு.க. ஆட்சிக்கு வரமுடியாது. அடுத்த 50 ஆண்டுகளுக்கும் முதலமைச்சர் விஜய் தலைமையிலான ஆட்சிதான் தமிழகத்தில் நடைபெறும்.
தேனி மாவட்டத்தில் சட்ட விரோதமாக செயல்பட்ட கல்குவாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கனிமவள கொள்ளையில் யார் ஈடுபட்டாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
த.வெ.க. அரசு 2 மாதங்களுக்குள் பல ஆயிரம் அரசு பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுத்துள்ளது. இன்னும் 4 ஆண்டுகளுக்கு மேல் ஆட்சி காலம் உள்ளது. அதற்குள் மக்கள் விரும்பும் மாற்றம் நிச்சயம் வரும்.
தமிழகத்தில் ஆளும் கட்சி, எதிர்கட்சி எம்.எல்.ஏ. தொகுதி என வேறுபாடு இல்லாமல் அனைத்து தொகுதிகளுக்கும் அரசு நலத்திட்டங்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்க விரைவில் உள்ளாட்சி தேர்தல் வர உள்ளது.
இதற்கான அறிவிப்பு எப்போது வேண்டு மானாலும் வரலாம். எனவே கட்சியினர் அதற்காக தயாராக இருக்க வேண்டும். தி.மு.க.வை வீழ்த்தி 100 சதவீத வெற்றியை பெற அனைவரும் கடுமையாக உழைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.