

தூத்துக்குடியில் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,
“தூத்துக்குடியின் தற்போதைய எம்.எல்.ஏ, அமைச்சராக இருப்பவர் ஸ்ரீநாத். தூத்துக்குடியை துறைமுக நகரமாக மாற்றுவோம் என அவர் கூறியுள்ளார். முதலில் தவெக சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் தொகுதி எது, அங்கு நிலவரம் என்ன, மக்களின் பிரச்னை என்னவென்பதை தெரிந்துகொள்ள வேண்டும்.
மக்கள் இவர்களோடு விழிப்புணர்வுடன் இருக்கவேண்டும். தூத்துக்குடி விளாத்திக்குளம் மாணவி வழக்கில் இன்று தீர்ப்பு வர உள்ளது. பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுபவர்களை தூக்கில் இடவேண்டும் அல்லது என்கவுண்ட்டர் செய்யவேண்டும்.
நேற்று கோவையில் 10 வயது குழந்தை கொலை. இன்று விழுப்புரத்தில் 11 வயது குழந்தை. விஜய் வந்ததும் முதல் கையெழுத்து சிங்கப்பெண் அதிரடிப்படைக்கு போட்டார். ஆனால் பல் இல்லாத அமைப்பாக அது இருப்பதாக ஆங்கில ஊடகங்கள் விமர்சித்துள்ளன. ஆகையால் இதையெல்லாம் விஜய் கவனிக்க வேண்டும்.
விஜய்யும் சிறுபான்மையினருக்கு ஆதரவாக இருப்பேன் எனக்கூறியுள்ளார். எல்லோரும் சிறுபான்மைக்கு ஆதரவு என்றால், உங்களுக்கு வாக்களித்த பெரும்பான்மை மக்களின் ஆதங்கத்தை யார் தீர்ப்பது? ஒரு குழந்தை இறந்துள்ளது. அதுதொடர்பாக பேசவரும் காவல்துறை அதிகாரி சிரிக்கிறார். அமைச்சர் சிரிக்கிறார். இவர்கள் என்ன உணர்வோடு இருக்கிறார்கள் என தெரியவில்லை. புது அரசு எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.
காங்கிரஸிற்கு பதவிஆசை என்பதால் உடனடியாக ஓடி தவெகவுடன் ஒட்டிக்கொண்டது. தனியாக நின்று காங்கிரஸ் வென்று, அமைச்சர் ஆவது என்பது இந்த உலகம் இருக்கும் வரை வாய்ப்பில்லை. திமுக தோளில் ஏறி, வெற்றிப்பெற்றுவிட்டு, அதிமுக - திமுக இணைந்து பதவிக்கு வர பாஜக உதவியது என்று மாணிக்கம் தாகூர் கூறுவதை வன்மையாக கண்டிக்கிறேன்.” என தெரிவித்தார்.