

உட்கட்லி மோதலால் கட்சியில் இருந்து விலகி இருந்தாலும் அதிமுகவின் முக்கிய முகமாக இருந்த, தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் ஓ.பி.எஸ். அண்மையில் திமுகவில் இணைந்தார். அவரின் வருகை திமுக கூட்டணிக்கு பெரும் பலமாக அமைந்ததாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இத்தேர்தலில் அதிமுக படுதோல்வி அடையும் என ஓ.பி.எஸ். தெரிவித்துள்ளார். இன்று சிவகங்கையில் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த அவர்,
“அதிமுக தேர்தலில் படுதோல்வி அடையும். எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் வளர்த்த கட்சியை இன்று அழிவுப்பாதையில் கொண்டு சென்றுள்ளார். ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தகாலத்தில் டெல்லியில் இருந்து இங்கு வந்துதான் கூட்டணி குறித்து பேசுவார்கள்.
ஆனால் இன்று இவர்கள் டெல்லிக்கு சென்று பேசும் அவலநிலையை கட்சிக்கு கொடுத்துள்ளனர். தமிழ்நாட்டில் பாஜக முக்கியத்துவம் வாய்ந்த கட்சி அல்ல. தனித்து நின்று ஒரு தொகுதியில்கூட பாஜகவால் ஜெயிக்கமுடியாது.” என தெரிவித்தார்.
தொடர்ந்து கோவை தொகுதியில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டால் என்ன செய்வீர்கள் என்ற கேள்விக்கு, ஒரு சாதாரண தொண்டனாகத்தான் திமுகவில் இணைந்துள்ளேன்’ என தெரிவித்தார்.