

அது 1979 செப்டம்பர் மாதம். இந்தியாவில் அவசரநிலை முடிந்து 2 வருடங்கள் தான் ஆகியிருந்தது. மத்தியில் ஜனதா கட்சியின் சரன் சிங் காபந்து பிரதமராக இருந்தார்.
இந்திரா காந்தி தனது ஆதரவை திரும்பப்பெற்றதால் அவர் அடுத்த 24 நாட்களில் ராஜினாமா செய்ய வேண்டிய நிலை.
ஜனதா கட்சியை சேர்த்தவரும் அப்போதைய மத்திய உலோக துறை அமைச்சருமான பிஜூ பட்நாயக் ஆட்சியை தக்க வைக்க ஒரு திட்டத்தை தீட்டினார். அது தான் திமுக - அதிமுக இணைப்பு.
ஒரிசா முதல்வராக இருந்தபோது தமிழக முதல்வர் கருணாநிதியுடன் அவருக்கு நல்ல பழக்கம் இருந்தது. மாநில சுயாட்சி, மாநில உரிமைகள் குறித்த திமுகவின் குரல் நாடெங்கும் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. அதை பட்நாயக் பலமுறை வியந்துள்ளார்.
சரி 1979 க்கு வருவோம். அப்போது தமிழ்நாட்டில் எம்ஜிஆர் ஆட்சி. மத்தியில் ஜனதா தளத்திற்கு எம்ஜிஆர் ஆதரவு இருந்தது. எனவே பட்நாயக் எம்ஜிஆரை சந்தித்து இந்த இணைப்பு குறித்து விவாதித்தார்.
செப்டம்பர் 12, 1979 சென்னை வந்த பட்நாயக், கருணாநிதியைச் சந்தித்துப் பேசினார். அதனைத் தொடர்ந்து சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகையில் எம்.ஜி.ஆர் மற்றும் கருணாநிதி இடையே ஒரு வரலாற்று சிறப்புமிக்க சந்திப்பு நிகழ்ந்தது.
இதில், கட்சிக்கு திமுக என்ற பெயரையும், கொடிக்கு அதிமுக கொடியையும் பயன்படுத்துவது என உடன்பாடு எட்டப்பட்டது. எம்.ஜி.ஆர் முதல்வராகவும், கருணாநிதி கட்சியின் ஆயுட்காலத் தலைவராகவும் இருக்க முடிவு செய்யப்பட்டது. இணைப்பை உறுதி செய்ய ஒரு சிறப்பு அவசர கூட்டமும் ஏற்பாடு செய்ய முடிவெடுக்கப்பட்டது.
ஆனால் இந்த சந்திப்பிற்கு அடுத்த நாள் வேலூரில் நடந்த மாநாட்டில் எம்.ஜி.ஆர் இந்த இணைப்பு குறித்து எதுவும் பேசவில்லை. மேலும், அதிமுக அமைச்சர்கள் திமுகவை விமர்சிக்க தொடங்கினர். இதனால் அதிமுக - திமுக திட்டத்திற்கு அன்றே முடிவுரை எழுதப்பட்டது.
சுதாரித்த இந்திரா காந்தி திமுகவுடன் கூட்டணி அமைத்து 1980 தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்றார்.
அதிமுக - திமுக திட்டம் குறித்தும் பட்நாயக் உடைய முயற்சி குறித்தும் கருணாநிதி தனது நெஞ்சுக்கு நீதி நூலில் விரிவாக எழுதியுள்ளார். மேலும் 2012 இல் நிகழ்வொன்றில் பேசியும் உள்ளார்.
விஜய்யின் தவெக ஆட்சியமைக்க பெரும்பான்மை கிடைக்காமல் தத்தளித்து வரும் சூழலில் நேற்றிரவு அதிமுக - திமுக இணைந்து கூட்டணி வைக்கும் என வதந்திகள் பரவின.
ஆனால் விஜய் ஆட்சியமைக்க திமுக எந்த இடையூறும் செய்யாது என ஆங்கில நாளிதலுக்கு அளித்த பெட்டியில் திமுக தலைவர் ஸ்டாலின் திட்டவட்டமாக தெரிவித்தார். இதன் மூலம் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டன.