

சட்டமன்ற தேர்தல் தோல்விக்கு பிறகு அ.தி.மு.க.வில் இருந்து 4 எம்.எல்.ஏ.க்கள் விலகி த.வெ.க.வில் இணைந்துள்ளனர். தலைமை செயலகத்தின் கீழ் தளத்தில் சபாநாயகர் அறையில் ராஜினாமா கடிதத்தை கொடுத்து விட்டு மேல் தளத்தில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அறையில் எம்.எல்.ஏ.க்கள் த.வெ.க.வில் இணைந்ததற்கு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்து இருந்தார்.
இது தொடர்பாக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களை இழுப்பதற்கு குதிரை பேரம் நடைபெறுவதாக குற்றம் சாட்டி இருந்தார்.
இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமியின் குதிரை பேரம் தொடர்பான புகார் மனுவை அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, மேல்சபை எம்.பி. தனபால் ஆகிய இருவரும் இன்று கவர்னர் அர்லேகரை சந்தித்து அளித்தனர்.
பின்னர் அக்ரி கிருஷ்ண மூர்த்தி அளித்த பேட்டி வருமாறு:-
தமிழகத்தில் குதிரை பேரம் மூலமாக அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களை விலை பேசும் த.வெ.க. அரசின் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்த வேண்டும் என்று கவர்னரிடம் மனு அளித்து உள்ளோம். தலைமை செயலகத்தை த.வெ.க. கட்சி அலுவலகமாக மாற்றி விட்டதாகவும் மனுவில் குறிப்பிட்டு உள்ளோம்.
இந்த குதிரை பேர விவகாரம் தொடர்பாக கவர்னர் உரிய நடவடிக்கை எடுப்பார் என்று நம்புகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.