

தமிழ்நாடு சட்டசபை தேர்தல் முடிவுக்கு பிறகு அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒரு அணியும், எஸ்.பி.வேலுமணி- சி.வி.சண்முகம் தலைமையில் மற்றொரு அணியும் செயல்பட்டது. இதையடுத்து நடைபெற்ற பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு எட்டப்பட்டதையடுத்து எஸ்.பி.வேலுமணி தலைமையிலான அணி எடப்பாடி பழனிசாமி அணியில் இணைந்து ஒரே அணியாக செயல்பட தொடங்கியுள்ளனர்.
இதனிடையே, மதுராந்தகம், பெருந்துறை, தாராபுரம், அம்பை தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்து த.வெ.க.வில் இணைந்தனர். இதற்கிடையே சி.வி.சண்முகமும் தனது எம்.எல்.ஏ.பதவியை ராஜினாமா செய்து த.வெ.க.வில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த நிலையில், அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தமிழக வெற்றிக்கழகத்தில் இணைந்துள்ளார். த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் முன்னிலையில் தனது ஆதரவாளர்களுடன் வெல்லமண்டி நடராஜன் த.வெ.க.வில் இணைந்துள்ளார்.
2016-2021 அ.தி.மு.க. ஆட்சியின் போது சுற்றுலாத்துறை அமைச்சராக இருந்தவர் வெல்லமண்டி நடராஜன். அ.தி.மு.க.வில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் நீக்கப்பட்டபோது அவரது ஆதரவாளராக செயல்பட்டார். பின்னர் ஓ.பன்னீர்செல்வம் தி.மு.க.வில் இணைந்ததைத் தொடர்ந்து மீண்டும் அ.தி.மு.க.வுக்கு வெல்லமண்டி நடராஜன் திரும்பினார். அப்போது அவருக்கு அமைப்புச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.