மத்திய பிரதேச சட்டசபையில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு- உச்ச நீதிமன்றம் உத்தரவு

மத்திய பிரதேசத்தில் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் அரசு சட்டசபையில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்
Published on

புதுடெல்லி:

மத்திய பிரதேசத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சியில் இருந்து ஜோதிராதித்ய சிந்தியா வெளியேறி பாஜகவில் இணைந்தார். அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் 22 பேரும் ராஜினாமா செய்தனர். அவர்களை பாஜக பிடித்து வைத்துள்ளதாகவும், ஆட்சியை கவிழ்க்க முயற்சிப்பதாகவும் காங்கிரஸ் தொடர்ந்து குற்றம்சாட்டிவருகிறது.

எம்எல்ஏக்களின் ராஜினாமாவால் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் அரசு பெரும்பான்மையை இழந்துள்ளது. சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என கவர்னர் உத்தரவிட்டும், நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தாமல் சபை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து கட்சியில் இருந்து விலகிய அதிருப்தி எம்எல்ஏக்களை சமாதானம் செய்யும் முயற்சியில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர். 

அதேசமயம் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த அரசுக்கு உத்தரவிடக்கோரி முன்னாள் முதல்வர் சிவராஜ் சவுகான் உள்பட 10 பாஜக எம்.எல்.ஏ.க்கள் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். அதில், சபாநாயகர் சட்டசபையை 26ம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளதால், பெரிய அளவில் குதிரை பேரம் நடப்பதாகக் குற்றம்சாட்டியிருந்தனர்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், மத்திய பிரதேசத்தில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தும்படி இடைக்கால உத்தரவு பிறப்பித்தனர். 

‘சட்டசபையில் நாளை மாலை 5 மணிக்குள் அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தி முடிக்க வேண்டும். சட்டம் ஒழுங்கு மீறப்படாமல் இருப்பதை தலைமைச் செயலாளர் உறுதி செய்ய வேண்டும். நாளைய சட்டசபை நிகழ்வுகள் அனைத்தையும் வீடியோவில் பதிவு செய்ய வேண்டும்’ என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com