search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கொரோனா நோயாளிகளுக்கு மின்னல் வேகத்தில் சிகிச்சை ஒத்திகை- தமிழகம் முழுவதும் அரசு ஆஸ்பத்திரிகளில் நடந்தது

    • சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் நடத்தப்பட்ட பாதுகாப்பு ஒத்திகையை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பார்வையிட்டார்.
    • இன்று தமிழகம் முழுவதும் 11 ஆயிரம் அரசு ஆஸ்பத்திரிகளில் ஒத்திகை நடந்தது.

    சென்னை:

    இந்தியா முழுவதும் மீண்டும் கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    அனைத்து மாநிலங்களிலும் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி மத்திய அரசு அறிவுறுத்தி இருக்கிறது.

    மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா அனைத்து மாநில சுகாதார அமைச்சர்களுடன் ஏற்கனவே ஆலோசனை மேற்கொண்டுள்ளார். தற்போது பரவி வரும் உருமாறிய கொரோனா வைரசால் பெரிய அளவில் ஆபத்து இருக்காது என்று கருதுகிறார்கள். இருப்பினும் இணை நோய் உள்ளவர்கள், வயதானவர்கள், கர்ப்பிணிகள் பாதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

    எனவே தேவையான முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் அனைத்தையும் மேற்கொள்கிறார்கள்.

    அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் தீவிர சிகிச்சை பிரிவு படுக்கை வசதிகள், ஆக்சிஜன் சப்ளை செய்யும் வசதிகள், படுக்கை வசதிகள் அனைத்தையும் ஆய்வு செய்து தேவையான வசதிகளை உடனடியாக செய்ய உத்தரவிடப்பட்டு உள்ளது.

    தலைநகர் டெல்லியில் நேற்று ஒரே நாளில் 699 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் 5 ஆயிரத்து 357 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

    படிப்படியாக கொரோனா அதிகரித்து வருவதால் மாநில அரசுகளும் சில கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. தமிழகத்தில் 11 ஆயிரம் அரசு ஆஸ்பத்திரிகளிலும் முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. பொது இடங்களிலும் பொதுமக்கள் முகக்கவசம் அணியும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளாார்கள்.

    புதுச்சேரி, அரியானா மாநிலங்களில் முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அரியானாவில் பள்ளி குழந்தைகளும் கட்டாயம் முகக்கவசம் அணிந்து வரும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்கள்.

    கேரளாவில் கர்ப்பிணிகள், முதியவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். உத்தரபிரதேசத்தில் அனைத்து விமான நிலையங்களிலும் கொரோனா பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையில் மத்திய சுகாதாரத்துறை இன்றும், நாளையும் அனைத்து தனியார் மற்றும் அரசு ஆஸ்பத்திரிகளிலும் கொரோனா பாதுகாப்பு தடுப்பு ஒத்திகை நடத்தும்படி மத்திய அரசு உத்தரவிட்டு இருந்தது.

    அதன்படி இன்று தமிழகம் முழுவதும் 11 ஆயிரம் அரசு ஆஸ்பத்திரிகளில் ஒத்திகை நடந்தது.

    சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் நடத்தப்பட்ட பாதுகாப்பு ஒத்திகையை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பார்வையிட்டார்.

    கொரோனா 2-வது அலையின் போது ஆம்புலன்சில் நோயாளிகள் அழைத்து வரப்பட்டாலும் படுக்கை இல்லாமை, ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக உள்ளே அனுமதிக்க முடியாத நிலை இருந்தது. அதனாலேயே பல உயிரிழப்புகளும் ஏற்பட்டது.

    அந்த மாதிரி நிலை வந்து விடக்கூடாது என்பதற்காக விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஆம்புலன்சில் கொரோனா நோயாளி ஒருவர் அழைத்து வரப்பட்டார். புறப்படும் போதே ஆம்புலன்ஸ் வருவதாக தகவல் கொடுக்கப்படுகிறது.

    சுகாதார பணியாளர்கள் ஆஸ்பத்திரி வாசலில் தயாராக காத்திருந்தனர். ஆம்புலன்ஸ் வந்ததும் நோயாளியை இறக்கி ஸ்டிரெச்சரில் படுக்க வைத்து மின்னல் வேகத்தில் வார்டுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

    வார்டில் அனுமதித்ததும் ஆக்சிஜன் தேவைப்பட்டால் உடனடியாக வழங்கப்படும். ஒத்திகையின் போது செவிலியர்கள், ஊழியர்கள் அனைவரும் முழு கவச உடை அணிந்து இருந்தனர்.

    இந்த திடீர் ஒத்திகையை பொதுமக்கள் மிரட்சியுடன் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவர்களிடம் மீண்டும் கொரோனா பரவி வருகிறது. கவனம் தேவை என்பதை வலியுறுத்தி மருத்துவ மாணவர்கள் பேனர்கள் வைத்து இருந்தார்கள்.

    Next Story
    ×