search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சட்டசபையில் கவர்னர் உரை விவகாரம்- ஜனாதிபதியிடம் தி.மு.க. புகார்
    X

    சட்டசபையில் கவர்னர் உரை விவகாரம்- ஜனாதிபதியிடம் தி.மு.க. புகார்

    • அமைச்சர் ரகுபதியிடம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சீல் வைத்த கடிதம் ஒன்றை கொடுத்து அனுப்பி உள்ளார்.
    • கடிதத்தில், 9-ந்தேதி சட்டசபையில் கவர்னர் உரையின் போது சில பகுதிகள் தவிர்க்கப்பட்டது பற்றி குறிப்பிட்டுள்ளார்.

    சென்னை:

    தமிழக சட்டசபையின் நடப்பு ஆண்டுக்கான முதல் கூட்டம் கடந்த 9-ந்தேதி தொடங்கியது. அதில் கவர்னர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு உரையாற்றினார்.

    அப்போது அவர் உரையில் சில பகுதிகளை படிக்காமல் தவிர்த்தார். தமிழ்நாடு, திராவிட மாடல், சட்டம்-ஒழுங்கு, முதலீடு தொடர்பான பத்திகளை கவர்னர் படிக்கவில்லை.

    சில பக்கங்களையும் கவர்னர் படிக்காமல் தவிர்த்தார். அதுமட்டுமின்றி சில விஷயங்களை சேர்த்து வாசித்தார். இறுதியில் கவர்னர் உரையில் இல்லாத ஜெய்ஹிந்த் என்ற வார்த்தையை பயன்படுத்தினார்.

    இது தி.மு.க.வினருக்கு அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியது. அதுமட்டுமின்றி இந்த நிகழ்வு சட்டசபையில் சலசலப்பை ஏற்படுத்தியது.

    இந்த நிலையில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கவர்னர் உரை வாசித்து முடிக்கப்பட்டதும் எழுந்து 2 பக்க அறிக்கையை வாசித்தார். அப்போது அவர் கவர்னர் உரையில் சில பத்திகள் வாசிக்கப்படாததற்கு வருத்தம் தெரிவித்தார்.

    கவர்னர் உரையில் தவிர்த்தவற்றை சேர்த்தும், புதிதாக சேர்த்து வாசித்தவற்றை நீக்கியும், அரசால் அச்சடித்து வழங்கப்பட்ட தமிழ், ஆங்கில உரைகள் மட்டும் அவைக்குறிப்பில் இடம்பெறும் என்றும் அறிவித்தார். இதை அவர் சட்டசபையில் தீர்மானமாக கொண்டு வந்தார். அந்த தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

    சட்டசபையில் தனக்கு எதிராக தீர்மானம் கொண்டு வரப்படுவதை அறிந்ததும் கவர்னர் ஆர்.என்.ரவி அதிருப்தி அடைந்தார். இதையடுத்து அவர் தேசிய கீதம் இசைக்கப்படும் முன்பாகவே சட்டசபையில் இருந்து வெளியேறினார்.

    சட்டசபையில் கவர்னர் உரையாற்றிய விவகாரத்தில் பல்வேறு அரசியல் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தன. கவர்னரை கண்டித்து போராட்டம் நடத்தப்போவதாகவும் அறிவித்தன. இதனால் இந்த விவகாரம் சர்ச்சையாக மாறி உள்ளது.

    இதற்கிடையில், கடந்த 9-ந்தேதி இரவு சட்ட நிபுணர்கள், தி.மு.க. சட்டப்பிரிவினர், மூத்த வழக்கறிஞர்களுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். கவர்னர் விவகாரம் தொடர்பாக ஜனாதிபதியை சந்தித்து முறையிடுவது என்று அப்போது முடிவு செய்யப்பட்டது.

    இதையடுத்து, நேற்று முன்தினம் மாலை, தி.மு.க. எம்.பி., டி.ஆர்.பாலு, ஆ.ராசா எம்.பி. ஆகியோர் ஜனாதிபதியை சந்திக்க நேரம் கேட்பதற்காக டெல்லி சென்றனர். ஆனால் ஜனாதிபதி மத்திய பிரதேச மாநிலம் சென்றிருந்ததால் அதில் தாமதம் ஏற்பட்டது.

    டெல்லி திரும்பிய ஜனாதிபதி திரவுபதி முர்மு தி.மு.க.வின் வேண்டுகோளை ஏற்றார். இன்று பகல் 11.45 மணிக்கு தி.மு.க. தலைவர்கள் 4 பேர் தன்னை வந்து சந்திக்கலாம் என்று அனுமதி வழங்கினார். இதையடுத்து சென்னையில் இருந்து சட்ட அமைச்சர் ரகுபதி டெல்லிக்கு புறப்பட்டு சென்றார்.

    அவரிடம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சீல் வைத்த கடிதம் ஒன்றை கொடுத்து அனுப்பி உள்ளார். அந்த கடிதத்தில், '9-ந்தேதி சட்டசபையில் கவர்னர் உரையின் போது சில பகுதிகள் தவிர்க்கப்பட்டது பற்றி குறிப்பிட்டுள்ளார்.

    இந்த கடிதத்தை எடுத்துக் கொண்டு அமைச்சர் ரகுபதி தலைமையில் தி.மு.க. எம்.பி.க்கள், டி.ஆர்.பாலு. ஆ.ராசா, ஜனாதிபதி மாளிகைக்கு சென்றனர். அங்கு ஜனாதிபதி திரவுபதி முர்முவை சந்தித்து பேசினார்கள்.

    அப்போது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடுத்து அனுப்பியிருந்த கடிதத்தை ஜனாதிபதியிடம் கொடுத்தனர். ஜனாதிபதி அதை பெற்றுக்கொண்டார். இதையடுத்து அவரிடம் விடைபெற்று தி.மு.க. தலைவர்கள் திரும்பினார்கள்.

    இதற்கு முன்பு கவர்னர் ஆர்.என்.ரவிக்கும், தமிழக அரசுக்கும் பல்வேறு பிரச்சினைகளில் உரசல் ஏற்பட்டிருக்கிறது. அப்போது தி.மு.க. தரப்பில் அதிருப்தி தெரிவிக்கப்படும்.

    ஆனால் தற்போது முதல் முறையாக கவர்னருக்கு எதிராக தி.மு.க. தரப்பில் ஜனாதிபதியிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. எனவே இது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

    Next Story
    ×