என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

அ.தி.மு.க. தொடங்கிய திட்டங்களை தி.மு.க. அரசு நிறுத்துவது கண்டிக்கத்தக்கது - எடப்பாடி பழனிசாமி
- அ.தி.மு.க. தொடங்கிய திட்டங்களை தி.மு.க. அரசு நிறுத்துகிறது. இது கண்டிக்கத்தக்கது என்றார்.
- வரும் பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள் என தெரிவித்தார்.
சேலம்:
சேலம் மாவட்டம் நங்கவள்ளி வடக்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் பல்வேறு ஊராட்சிகளில் அ.தி.மு.க. கொடியேற்று விழா நடந்தது. விழாவில் முன்னாள் முதலமைச்சரும், அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு அ.தி.மு.க. கொடியேற்றினார்.
இதையடுத்து நடந்த அ.தி.மு.க. பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:
மேட்டூர் அணையை அ.தி.மு.க. அரசுதான் தூர்வாரி விவசாயிகளுக்கு வண்டல் மண் கொண்டு செல்ல நடவடிக்கை எடுத்தது.
அ.தி.மு.க. தொடங்கிய திட்டங்களை தி.மு.க. அரசு நிறுத்துகிறது. இது கண்டிக்கத்தக்கதது. தி.மு.க. அரசு பல பேருக்கு முதியோர் உதவித்தொகையை நிறுத்திவிட்டது. அ.தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன் விடுபட்ட அனைத்து முதியோர்களுக்கும் உதவித்தொகை கிடைக்கவும், தமிழகம் முழுவதும் ஏழை முதியோர்களை கண்டறிந்து உதவித்தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இதற்கு முன்பு 3 அமைச்சர்கள் குறித்து குற்றச்சாட்டு எழுந்தபோது பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டனர். ஆனால் செந்தில் பாலாஜியை ஏன் பதவியில் இருந்து விடுவிப்பதற்கு முதலமைச்சர் தயக்கம் காட்டுகிறார். ஏனென்றால் அவர் வாயை திறந்தால் ஊழல் குற்றச்சாட்டு வெளிவந்துவிடும். ஆட்சிக்கு ஆபத்து வந்துவிடும் என்பதால் கைதியாக அறிவிக்கப்பட்டவரை காப்பாற்ற நினைக்கிறார்.
தற்போது ரேஷன் கடையிலும் முறைகேடுகள் நடக்கிறது. ஊழலுக்கு சம்மட்டி அடி கொடுக்க வருகிற பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள் என தெரிவித்தார்.






