

புதுச்சேரி:
சட்டசபை தேர்தலில் தமிழகத்தில் இந்தியா கூட்டணியில் தி.மு.க. தலைமையில் காங்கிரஸ் கம்யூனிஸ்டுகள், தே.மு.தி.க. உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன.
தற்போது கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் உள்ள கூட்டணியே புதுச்சேரியிலும் தொடர்வது வழக்கம்.
அதுபோல் புதுச்சேரியில் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி உறுதியானாலும் தொகுதி பங்கீட்டில் தொடர்ந்து சிக்கல் நீடித்து வருகிறது.
இதற்கிடையே காங்கிரஸ் 14 தொகுதிகளிலும் தி.மு.க. 12 தொகுதிகளிலும் இந்திய கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தை கட்சிக்கு தலா 1 தொகுதியும் ஒதுக்குவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் காங்கிரசும் தி.மு.க.வும் ஒரே தொகுதியில் வேட்பாளர்களை நிறுத்த முடிவு செய்து அவர்களும் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.
இந்த நிலையில் புதுவை காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. போட்டியிடும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா நேற்று அறிவித்தார்.
அதனை ஏற்று புதுவை தே.மு.தி.கவினர் வேட்பு மனு தாக்கலுக்கு கடைசி நாளான நேற்று கடைசி நேரத்தில் நெட்டப்பாக்கம் (தனி) மற்றும் மண்ணாடிப்பட்டு ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிட மனு தாக்கல் செய்துள்ளனர்.
கூட்டணியில் தொகுதி பங்கீட்டில் சுமூக முடிவு ஏற்பட்ட பின்பு தே.மு.தி.க.வுக்கு தொகுதிகள் ஒதுக்கப்படுமா என்பது தெரியவரும். அப்படி தொகுதி ஒதுக்காவிட்டால் கட்சியின் கட்டளைக்கேற்ப தேர்தலில் போட்டியிடுவதா அல்லது கூட்டணி கட்சிகளுக்கு ஆதரவாக மனுவை வாபஸ் பெறுவதா என்பது குறித்து முடிவு செய்யப்படும் என புதுவை மாநில தே.மு.தி.க. நிர்வாகி வி.பி.பி.வேலு தெரிவித்தார்.