

புதுவையில் திமுகவுக்கு ஒதுக்கப்பட்ட 13 தொகுதிகளில் காலாப்பட்டு, ராஜ்பவன், திருபுவனை, காரைக்கால் தெற்கு, மங்கலம், விடுதலை சிறுத்தைக்கு ஒதுக்கப்பட்ட உழவர்கரை ஆகிய தொகுதிகளில் போட்டி காங்கிரஸ் வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
அவர்கள் காங்கிரஸ் கொடி, தலைவர்கள் படம் ஆகியவற்றுடன் நோட்டீஸ் விநியோகம் செய்து வீடு, வீடாக வாக்கு சேகரித்து வருகின்றனர். இதனால் இந்த தொகுதிகளில் இந்தியா கூட்டணி வாக்குகள் பிளவுபட்டுள்ளது. இந்த பிளவால் திமுக வேட்பாளர்கள் வெற்றி கேள்விக்குறியாகி உள்ளது. இது திமுகவினரை கடும் அதிருப்தியடைய செய்துள்ளது.
இந்த நிலையில் காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம், காங்கிரஸ் கொடி, தலைவர்கள் படத்தை போட்டி வேட்பாளர்கள் பயன்படுத்த கூடாது என்றும், அவர்களுடன் காங்கிரஸ் தொகுதி நிர்வாகிகள் ஓட்டு கேட்க செல்லக்கூடாது என்றும் உத்தரவு பிறப்பித்தார். ஆனால் இன்று போட்டி வேட்பாளர்கள் தங்கள் தொகுதிகளில் காங்கிரஸ் நிர்வாகிகளுடன் கட்சி, கொடி தலைவர்கள் படங்களுடன் ஓட்டு சேகரித்தனர்.
ராஜ்பவன் தொகுதியில் போட்டியிடும் போட்டி காங்கிரஸ் வேட்பாளர் குமரனிடம், நீங்கள் தேர்தலில் பிரசாரம் செய்யாமல் ஒதுங்குவீர்களா? என கேட்டபோது, ராகுல் காந்திக்கு திருமணம் நடந்தால்தான், நான் வாபஸ் பெறுவேன் என கூறினார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.