

புதுவை சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ், கூட்டணியில் 16, கூட்டணி இல்லாமல் 6 என மொத்தம் 22 தொகுதிகளில் கை சின்னத்தில் போட்டியிட்டது.
ஆனால் புதுவை ஊசுடு தனி தொகுதியில் மட்டும்தான் காங்கிரஸ் வெற்றி பெற்றது. 2024 பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் ஒரு லட்சத்து 30 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
30 தொகுதிகளில் 29 தொகுதிகளில் காங்கிரஸ் முன்னிலை பெற்றது. ஆனால் இந்த சட்டசபை தேர்தலில் 11 தொகுதிகளில் காங்கிரஸ் டெபாசிட் இழந்தது.
இது புதுவை காங்கிரஸ் நிர்வாகிகளிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் படுதோல்விக்கு மாநில தலைவர் வைத்திலிங்கம் பொறுப்பேற்று தார்மீக அடிப்படையில் ராஜினாமா செய்ய வேண்டும் என காங்கிரசில் ஒரு தரப்பினர் வலியுறுத்தினர்.
கடந்த 6-ந் தேதி புதுவை காங்கிரஸ் அலுவலகம் முன்பு வைத்திலிங்கம் ராஜினாமா செய்யக்கோரி ஆர்ப்பாட்டமும் நடத்தினர்.
இதனிடையே வைத்திலிங்கம் எம்பி தனது மாநில தலைவர் பதவியை ராஜினாமா செய்து கட்சித் தலைமைக்கு கடிதம் அனுப்பினார்.
அதோடு, எதிர்ப்பு தெரிவித்த காங்கிரஸ் நிர்வாகிகள் 10-க்கும் மேற்பட்டோரை சஸ்பெண்டு செய்து, விளக்கம் கேட்டு நோட்டீசும் அனுப்பினார். காங்கிரஸ் நிர்வாகிகள், ராஜினாமா செய்த தலைவருக்கு தங்களை சஸ்பெண்டு செய்ய எந்த அதிகாரமும் இல்லை என அதிரடியாக தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் நேற்றைய தினம் சென்னையில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் தவெக அமைச்சரவையில் இடம்பெற்று அமைச்சர்களாக பொறுப்பேற்றனர். இந்த விழாவில் பங்கேற்க தமிழகம், புதுவை பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் சென்னை வந்திருந்தார்.
அவரை சஸ்பெண்டு செய்யப்பட்ட புதுவை மாநில நிர்வாகிகள் சிவசண்முகம், ரகுமான், வேல்முருகன், சரவணன், செல்வம், நந்தா கலைவாணன், குலசேகரன், புகழேந்தி ஆகியோர் சந்தித்தனர். அப்போது, வைத்திலிங்கம் எம்பி மீது சரமாரியாக குற்றச்சாட்டுகளை கூறினர்.
கடந்த 6-ந் தேதி காங்கிரஸ் அலுவலகம் வரும்படி மாநில தலைவராக இருந்த வைத்திலிங்கத்தை அழைத்தோம். ஆனால் அவர் வரவில்லை. இதனால்தான் தோல்விக்கு பொறுப்பேற்று ராஜினாமா செய்ய வலியுறுத்தினோம்.
கட்சிக்கு எதிராக நாங்கள் செயல்படவில்லை. புதுவையில் புதிய காங்கிரஸ் தலைவரை நியமிக்க வேண்டும். இளைஞரை தலைவராக நியமிக்க வேண்டும். அப்போதுதான் மீண்டும் காங்கிரஸ் கட்சி புத்துயிர் பெறும். இல்லாவிட்டால் தமிழகத்தில் காங்கிரசுக்கு ஏற்பட்ட நிலை புதுவையிலும் வந்துவிடும்.
ஏற்கனவே ஆட்சியில் 5 ஆண்டுகளை இழந்துள்ளோம். தற்போது 2வது முறையாக தோல்வியடைந்துள்ளோம். இது கட்சி தொண்டர்களிடையே பெரும் சோர்வை ஏற்படுத்தியுள்ளது. அந்த சோர்வை நீக்க புத்துணர்ச்சியுடன் செயல்படும் தலைவரை நியமிக்க வேண்டும். எங்கள் மீதான சஸ்பெண்டு நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.
இதைக்கேட்ட கிரீஷ் சோடங்கர், விளக்க கடிதம் எழுதி அனுப்புங்கள். சஸ்பெண்டை வாபஸ் பெறுவோம். கட்சிக்கு எதிராக யாரும் செயல்படாதீர்கள். உங்கள் கோரிக்கையை கட்சி மேலிடத்திடம் தெரிவிக்கிறேன் என தெரிவித்தார்.