படுதோல்வி ஏன்? - ஆய்வு செய்ய புதுவை வரும் காங்கிரஸ் மேலிடக்குழு

தமிழகத்தில் ஆட்சியில் இல்லாதபோதும் புதுவையில் காங்கிரஸ் தொடர்ந்து ஆட்சியை கைப்பற்றி வந்தது.
படுதோல்வி ஏன்? - ஆய்வு செய்ய புதுவை வரும் காங்கிரஸ் மேலிடக்குழு
Published on

புதுவையில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் ஆளும் கட்சிக்கு எதிரான இந்தியா கூட்டணி உடைந்தது.

இந்தியா கூட்டணியில் இடம் பெற்றிருந்த கம்யூனிஸ்ட்டு கட்சிகள் தனித்து களம் இறங்கின. தமிழகத்தில் இடம்பெற்றிருந்த தேமுதிக, மதிமுக, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் உள்ளிட்ட கட்சிகள் புதுவை கூட்டணியில் இடம்பெறவில்லை.

திமுக, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒருங்கிணைந்து போட்டியிட்டன. ஆனாலம் காங்கிரஸ் திமுக போட்டியிட்ட 5 தொகுதிகளிலும், விடுதலை சிறுத்தைகள் கட்சி போட்டியிட்ட ஒரு தொகுதியிலும் என 6 தொகுதியில் போட்டி வேட்பாளர்களை காங்கிரஸ் களத்தில் இறங்கியது.

தேர்தல் முடிவில் போட்டி வேட்பாளர்கள் தங்களுக்கு கைகொடுப்பார்கள் என காங்கிரஸ் எதிர்பார்த்தது. ஆனால் தேர்தல் முடிவு எதிர்பதமாக அமைந்தது. 22 தொகுதிகளில் கை சின்னத்தில் போட்டியிட்ட காங்கிரஸ் ஒரு தொகுதியில் மட்டும்தான் வெற்றி பெற்றது.

இதற்கு கூட்டணி கட்சிகளை அரவணைக்காதது, போட்டி வேட்பாளர்களை களம் இறக்கியது என பல்வேறு புகார்கள் எழுந்துள்ளது.

புதுவை காங்கிரசின் கோட்டையாக இருந்தது. சுமார் 40 ஆண்டுக்கு மேலாக புதுவையில் காங்கிரஸ் ஆட்சி நடந்துள்ளது. தமிழகத்தில் ஆட்சியில் இல்லாதபோதும் புதுவையில் காங்கிரஸ் தொடர்ந்து ஆட்சியை கைப்பற்றி வந்தது. இத்தகைய சூழலில் 2 கடந்த சட்டமன்ற தேர்தல்களில் காங்கிரஸ் படுதோல்வியடைந்துள்ளது.

இது கட்சி தலைமைக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் காங்கிரஸ் படுதோல்வி குறித்து ஆராய அகில இந்திய செயலாளர் சூரஜ்ஹெக்டே தலைமையில் ஒரு குழுவை புதுவைக்கு அனுப்புகின்றனர். இந்த குழுவினர் வரும் திங்கள்கிழமை புதுவைக்கு வருகின்றனர்.

அவர்கள் கட்சி நிர்வாகிகளை சந்தித்து தோல்விக்கான காரணம் குறித்து கேட்டறிகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com