

புதுச்சேரி:
புதுச்சேரி சட்டசபை தேர்தலில் என்.ஆர். காங்கிரஸ், பா.ஜனதா, அ.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய தேசிய ஜனநாயக கூட்டணிக்கும், தமிழகத்தை பின்பற்றி காங்கிரஸ், தி.மு.க., கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள், தே.மு.தி.க., ம.தி.மு.க. உட்பட இந்தியா கூட்டணி இடையிலும் நேரடி போட்டி ஏற்படும் என எதிர்பார்க்கப்பட்டது.
தேசிய ஜனநாயக கூட்டணி பேச்சுவார்த்தையில் கடந்த 20-ந்தேதி உடன்பாடு ஏற்பட்டு, 30 தொகுதிக்கும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு, இறுதி நாளில் மனு தாக்கல் செய்தனர்.
ஆனால் இந்தியா கூட்டணியில் தொகுதி பங்கீடு வேட்புமனு தாக்கலுக்கு பிறகும் நீடித்தது. இதனால் கூட்டணியில் இடம்பெற்றிருந்த கட்சிகள் அவரவர் விரும்பிய தொகுதிகளில் மனு தாக்கல் செய்தனர்.
இந்திய கம்யூனிஸ்டு கட்சி தட்டாஞ்சாவடி, உழவர்கரை ஆகிய 2 தொகுதியிலும், விடுதலை சிறுத்தைகள் கட்சி ஊசுடு, நெட்டப்பாக்கம், உழவர்கரை ஆகிய 3 தொகுதியிலும், மார்க்சிஸ்டு முத்தியால்பேட்டை, பாகூர், திருபுவனை, லாஸ்பேட்டை ஆகிய 4 தொகுதியிலும் மனு தாக்கல் செய்தனர்.
நீண்ட இழுபறிக்கு பின்னால் இந்தியா கூட்டணியில் மொத்தம் உள்ள 30 தொகுதிகளில் காங்கிரசுக்கு 16, தி.மு.க. உட்பட கூட்டணி கட்சிகளுக்கு 14 என தொகுதி பங்கீடு அறிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து தி.மு.க. தான் போட்டியிடும் 13 தொகுதிகளின் பட்டியலையும், வேட்பாளரையும் அறிவித்தது. மேலும் உழவர்கரை தொகுதியை விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஒதுக்கியுள்ளதாகவும் அறிவித்தது.
இந்த நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி மனு தாக்கல் செய்த 3 தொகுதிகளில் தனித்து போட்டியிடுவதாகவும், பிற தொகுதிகளில் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரிப்போம் என்றும் கட்சியின் தலைவர் திருமாவளவன் அறிவித்தார்.
தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடித்ததால், கூடுதலான தொகுதிகளில் காங்கிரஸ், தி.மு.க. இரு தரப்பினரும் மனு தாக்கல் செய்திருந்தனர்.
தொகுதி உடன்பாடு ஏற்பட்ட பின்பு இரு கட்சிகளும் கூட்டணிக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் தாக்கல் செய்த மனுக்களை வாபஸ் பெற வலியுறுத்தினர்.
தி.மு.க. தலைமை, காங்கிரஸ் தொகுதிகளில் மனுதாக்கல் செய்த தங்கள் கட்சி வேட்பாளர்களுக்கு ஏ, பி படிவங்களை வழங்கவில்லை. இதனால் அவர்கள் அங்கீகரிக்கப்பட்ட தி.மு.க. வேட்பாளர்களாக கருதப்படவில்லை. அவர்களின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது.
ஆனால் காங்கிரஸ் மனு தாக்கல் செய்த அனைவருக்கும் ஏ, பி படிவங்களை வழங்கியது. இதனால் அவர்கள் அனைவரும் காங்கிரஸ் வேட்பாளர்களாக அங்கீகரிக்கப்பட்டு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது.
இதனால் தி.மு.க.வுக்கு ஒதுக்கப்பட்ட காலாப்பட்டு, ராஜ்பவன், நெல்லித்தோப்பு, மங்கலம், திருபுவனை, காரைக்கால் தெற்கு ஆகிய தொகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர். இவர்களை வாபஸ் பெறும்படி கட்சியின் தலைமை அறிவுறுத்தியுள்ளது.
ஆனால் காலாப்பட்டு தொகுதியில் முன்னாள் அமைச்சர் ஷாஜகான், ராஜ்பவன் தொகுதியில் வக்கீல் குமரன், மங்கலத்தில் ரகுபதி, திருபுவனையில் வேலு, காரைக்கால் தெற்கு தொகுதியில் சக்திவேல் பிரபு ஆகியோர் வாக்கு சேகரிக்கும் பணியை தொடங்கிவிட்டனர்.
நெல்லித்தோப்பு தொகுதியில் மட்டும் இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஆனந்தபாபு கட்சி தலைமை உத்தரவை ஏற்று மனுவை வாபஸ் பெறுவேன் என அறிவித்துள்ளார். இதனால் மற்ற 4 தொகுதிகளில் நாளைக்குள் காங்கிரஸ் வேட்பாளர்கள் மனுவை வாபஸ் பெறாவிட்டால், அந்த தொகுதிகளில் தி.மு.க.வின் உதய சூரியன் சின்னமும், காங்கிரசின் கை சின்னமும் தனித்தனியே போட்டியிடும் நிலை உருவாகி உள்ளது.