எடப்பாடி பழனிசாமி மவுனம் காப்பது ஏன்?: ஓ.பன்னீர்செல்வம் அணி தலைவர்கள் கேள்வி

சசிகலா, தினகரனை ஒதுக்கி வைக்கும் வி‌ஷயத்தில் எடப்பாடி பழனிசாமி மவுனம் காப்பது ஏன்? என ஓ.பன்னீர்செல்வம் அணியைச் சேர்ந்த தலைவர்கள் கேள்வியெழுப்பியுள்ளனர்.
எடப்பாடி பழனிசாமி மவுனம் காப்பது ஏன்?: ஓ.பன்னீர்செல்வம் அணி தலைவர்கள் கேள்வி
Published on

சென்னை:

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. அம்மா அணியையும், முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தலைமையிலான அ.தி.மு.க. புரட்சித்தலைவி அம்மா அணியையும் இணைக்க கடந்த சில தினங்களாக தீவிர பேச்சுவார்த்தை நடந்தது.

இதில் சுமூக தீர்வு எட்டப்பட்டு விடும் என்று எதிர் பார்க்கப்பட்டது. ஆனால் ஒரு கட்டத்துக்கு பிறகு பேச்சுவார்த்தையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.

இரு அணிகள் இணைப்பு வி‌ஷயத்தில் ஏன் முட்டுக்கட்டை நீடிக்கிறது என்று ஓ.பி.எஸ். அணி தலைவர்களிடம் கேட்கப்பட்டபோது, அவர்கள் தங்கள் தரப்பில் தெளிவாக இருப்பதாகவும், இனி முடிவு எடுக்க வேண்டியது எடப்பாடி பழனிசாமி தான் என்றும் கூறினார்கள். ஓ.பி.எஸ். அணி மூத்த தலைவர் ஒருவர் கூறியதாவது:-

அ.தி.மு.க. ஆட்சி மற்றும் கட்சி விவகாரங்களில் சசிகலாவும், டி.டி.வி.தினகரனும் தலையிடுவதை கண்டித்து ஓ.பன்னீர்செல்வம் புரட்சி செய்து வெளியேறினார். ஆனால் இந்த வி‌ஷயத்தில் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து மவுனமாக இருக்கிறார்.

டி.டி.வி. தினகரன் புதிய நிர்வாகிகள் அறிவித்து 5 நாட்களாகி விட்டது. இன்னமும் எடப்பாடி பழனிசாமியால் எதுவும் செய்ய இயலவில்லை. அவரது இந்த மவுனம், அவரது பலவீனத்தையே காட்டுகிறது.

இவ்வாறு அந்த மூத்த தலைவர் கூறினார்.

ஓ.பி.எஸ். அணியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் மாபா பாண்டியராஜன் இது தொடர்பாக கூறியதாவது:-

இரு அணிகள் இணைப்பு பற்றி இரண்டாம் கட்ட தலைவர்கள் பல தடவை பேசி விட்டனர். ஆனால் எந்த முடிவும் எட்டப்படவில்லை. இந்த வி‌ஷயத்தில் இரு அணிகளிடமும் ஒருமித்த கருத்து உருவாக வேண்டுமானால் எடப்பாடி பழனிசாமியும், ஓ. பன்னீர்செல்வமும் சந்தித்து தனியாக பேச வேண்டும்.

அவர்கள் இருவரும் மனம் விட்டு பேசினாலே போதும், எல்லா பிரச்சனைகளும் தீர்ந்து விடும். அவர்கள் நேரில் சந்தித்தால் அணிகள் இணைப்புக்கு வழி பிறந்து விடும். கட்சி நலன் கருதி அவர்கள் சந்திக்கும் முடிவை மேற்கொள்ள வேண்டும்.

அதை விடுத்து இரு அணிகளிலும் உள்ள மற்ற தலைவர்கள் சந்தித்து பேசினால் அது சம்பிரதாயமாகத்தான் இருக்கும். வெற்றி கிடைக்காது. இரு அணிகளும் இணைய வேண்டும் என்பதே எனது தனிப்பட்ட கருத்தாகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஓ.பி.எஸ். அணியை சேர்ந்த மற்றொரு மூத்த தலைவரான கே.பி.முனுசாமி கூறியதாவது:-

சசிகலா, டி.டி.வி.தினகரன் மற்றும் அவர்களது குடும்பங்களை சேர்ந்தவர்கள் அ.தி.மு.க. ஆட்சி, கட்சி விவகாரங்களில் தலையிட முடியாதபடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அதுவரை இரு அணிகள் இணைப்பு என்ற பேச்சுவார்த்தைக்கே இடமில்லை.

மன்னார்குடி குடும்பத்தை விலக்கி வைத்து விட்டால் பேச்சுவார்த்தையை இன்றே தொடங்கி விடலாம். அதில் எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. சேர்ந்து விவாதிக்கலாம்.

இதுவரை நடத்தப்பட்டுள்ள அனைத்து பேச்சு வார்த்தைகளிலும் நாங்கள் “கட்சியில் இருந்து சசிகலாவை விலக்க வேண்டும் என்று தொடர்ந்து கூறி வருகிறோம். ஆனால் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து மவுனமாக இருக்கிறார்.

அவர் இந்த பிரச்சனை பற்றி பொது மக்களுக்கு தெரியும் வகையில் அனைத்தையும் வெளிப்படையாக பேச வேண்டும். அப்படியானால்தான் பிரச்சனைகளுக்கு இனி தீர்வு காண முடியும்.

இவ்வாறு கே.பி.முனுசாமி கூறினார்.

அ.தி.மு.க. மூத்த தலைவர் பொன்னையன் இந்த விவகாரம் குறித்து கூறியதாவது:-

எடப்பாடி பழனிசாமி அணியினர் மிகவும் குழப்பத்தில் உள்ளனர். அந்த அணியில் நிறைய கோஷ்டிகள் இருக்கிறது. அந்த அணி தலைவர்கள் மாறுபட்ட வகைகளில் பேசி வருகிறார்கள். யாரையும் கட்டுப்படுத்த இயலவில்லை.

அந்த அணியில் எம்.எல்.ஏ.க்கள் மட்டும்தான் இருக்கிறார்கள். அ.தி.மு.க. நிர்வாகிகளும், தொண்டர்களும் ஓ.பன்னீர்செல்வம் பக்கம்தான் இருக்கிறார்கள்.

இப்போது எடப்பாடிக்கும் டி.டி.வி.தினகரனுக்கும் மோதல் முற்றியுள்ளது. சசிகலா குடும்பத்தினரை அகற்றினால்தான் இரு அணிகளும் இணைய முடியும்.

இவ்வாறு அ.தி.மு.க. மூத்த தலைவர் பொன்னையன் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com