

மேற்கு வங்கத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தோல்வியை தழுவியது. தேர்தல் தோல்விக்குப்பின் அக்கட்சியில் பிளவு ஏற்பட்டுள்ளது. வெற்றி பெற்ற 80 எம்.எல்.ஏ.-க்களில் 60-க்கும் மேற்பட்டோர் தனியாக செயல்படுவதாக அறிவித்தனர். இது மொத்த எம்.எல்.ஏ.-க்ளில் 3-ல் இரண்டு பங்கு என்பதால் மம்தா பானர்ஜியால் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியவில்லை.
எம்.எல்.ஏ.-க்களை தொடர்ந்து எம்.பி.க்களிடம் அதிருப்தி ஏற்பட்டது. 20 மக்களவை எம்.பி.க்கள் தனியாக செயல்படுவதாக சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் கடிதம் கொடுத்தனர். பின்னர் தாங்கள் இந்தியாவின் தேசியவாதக் குடிமக்கள் கட்சியுடன் (the Nationalist Citizens Party of India- NCPI) இணைவதாக அறிவித்தனர்.
3-ல் இரண்டு பங்கு எம்.பி.க்கள் சென்றதால் இதிலும் மம்தாவால் ஒன்றும் செய்ய இயலவில்லை. இந்த நிலையில் மக்களவையில் 3-ல் இரண்டு பங்கு பலத்தை பாஜக விரும்புகிறது. இதனடிப்படையில்தான் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்களை சட்டவிரோதமாக பிரிப்பதில் அமித் ஷா மூளையாக செயல்பட்டுள்ளார் என்று காங்கிரஸ் கட்சியின் ஜெய்ராம் ரமேஷ் குற்றம்சாட்டியுள்ளார்.
சர்தார் வல்லபாய் படேல் வகித்த அந்தப் பதவிக்கே (உள்துறை அமைச்சர்) பெரும் அவமானமாக திகழும் மத்திய உள்துறை அமைச்சர் ஒருவர், இந்திய ஜனநாயகத்தை வெட்கக்கேடான வகையில் மிக மோசமான நிலைக்குத் தள்ளியுள்ளார்.
திரிணாமுல் காங்கிரஸ் (TMC) கட்சியைச் சேர்ந்த 20 நாடாளுமன்ற உறுப்பினர்கள் சட்டவிரோதமாக பிரிந்து செல்வதற்கும், வெறும் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டதும்- பதிவு செய்யப்பட்டிருந்தாலும் அங்கீகாரம் பெறாததுமான ஒரு பெயர் தெரியாத அரசியல் அமைப்போடு அவர்கள் இணைவதற்கும் இவரே சூத்திரதாரியாகச் செயல்பட்டுள்ளார்.
மக்களவையில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு (NDA) மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையை உருவாக்கும் நோக்கில் மத்திய உள்துறை அமைச்சர் வகுத்துள்ள வியூகத்தின் ஒரு பகுதியாகவே இந்த விசித்திரமான நடவடிக்கை அமைந்துள்ளது. அவர் பதவியில் நீடிக்கும் ஒவ்வொரு நாளும் கண்ணியம், நாகரிகம் மற்றும் அரசியலமைப்பு மதிப்புகள் மீதான அர்ப்பணிப்பு ஆகியவை அச்சுறுத்தலுக்கும் ஆபத்துக்கும் உள்ளாகிக்கொண்டே இருக்கின்றன.
இவ்வாறு ஜெய்ராம் ரமேஷ் குறிப்பிட்டுள்ளார்.