

மேற்கு வங்க சட்டசபை தேர்தலில் தோல்வியை தழுவிய பின் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி பிளவுபட்டு வருகிறது.
முதலில் 80 எம்எல்ஏக்களில் 52 பேர் தனி அணியாக பிரிந்தனர். தற்போது திரிணாமுல் காங்கிரஸ் பாராளுமன்ற எம்பிக்களும் கட்சியை கைவிட்டு பாஜக பக்கம் தாவ உள்ளதாக கூறப்படுகிறது. சத்ருகன் சின்ஹா, யூசுப் பதான் உள்ளிட்டோர் இந்த கிளர்ச்சி எம்பிக்கள் லிஸ்டில் உள்ளனர்.
இந்த தொடர் அடிகளால் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியே அழியும் சூழல் உருவாகியுள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
இந்நிலையில் திரிணாமுல் காங்கிரசை அழிவில் இருந்து தடுக்க, அக்கட்சியை காங்கிரஸ் உடன் இணைக்க பேச்சுவார்த்தை நடந்து வரவதாக செய்திகள் பரவின.
டெல்லியில் காங்கிரஸ் நாடாளுமன்றக் குழுத் தலைவர் சோனியா காந்தியை, மம்தா பானர்ஜி நேரில் சந்தித்துப் பேசியதைத் தொடர்ந்து இரு கட்சிகளும் இணையப் போவதாக ஊடகங்களில் செய்திகள் பரவின.
இந்த யூகங்களை மறுத்துள்ள காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் பக்கத்தில், "சோனியா காந்தி - மம்தா பானர்ஜி இடையேயான சந்திப்பு முற்றிலும் தனிப்பட்ட மற்றும் நட்பு ரீதியிலானது. இரு கட்சிகளின் இணைப்பு குறித்து எந்தவொரு திட்டமும் பரிசீலனையில் இல்லை.
பரப்பப்படும் செய்திகள் யாவும் முற்றிலும் உண்மைக்கு புறம்பானவை," என்று தெளிவுபடுத்தியுள்ளார்.
அதேநேரம் தாங்கள் திரிணாமுல் காங்கிரஸிலேயே தொடர்வதாகவும், காங்கிரசில் இணையவில்லை என்றும் அதிருப்தி எம்எல்ஏக்கள் குழு தலைவரும் மேற்கு வங்க எதிர்க்கட்சித் தலைவருமான ரிதாப்ரதா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
இதனிடையே இந்தியா கூட்டணியை வலுப்படுத்துவது ஒன்றே தங்கள் நோக்கம் என காங்கிரஸ் தெரிவித்துள்ளது. அண்மையில் நடந்த இந்தியா கூட்டணி கூட்டத்தில் மம்தா கலந்துகொண்டார் .
முன்னதாக 1998 இல் காங்கிரசில் இருந்து பிரிந்து மம்தா பானர்ஜி தொடங்கியதே திரிணாமுல் காங்கிரஸ் என்பது குறிப்பிடத்தக்கது.