

பிரதமர் மோடி ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை மன் கி பாத் (மனதின் குரல்) நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களிடம் உரையாற்றி வருகிறார்.
இன்று 132-வது மனதின் குரல் நிகழ்ச்சியில் மோடி பேசியதாவது:-
கடந்த காலத்தில் கொரோனா பெருந்தொற்றின் காரணமாக உலகம் முழுவதும் நீண்ட காலத்திற்குப் பல்வேறு சிக்கல்கள் வந்தன. இதை நாம் அனைவரும் எதிர்கொண்டதை நினைவில் வைத்திருக்கிறோம்.
கொரோனா நெருக்கடியில் இருந்து மீண்ட பிறகு உலகம் ஒரு புதிய தொடக்கத்துடன் முன்னேற்றப் பாதையில் பயணிக்கும் என்று நாம் அனைவரும் எதிர்பார்த்தோம். ஆனால் உலகின் பல்வேறு பிராந்தியங்களில் போர் மற்றும் மோதல்கள் சார்ந்த சூழல்களே தொடர்ந்து தலை தூக்கி வருகின்றன.
தற்போது கடந்த ஒரு மாத காலமாக நமது அண்டைப்பகுதியில் ஒரு கடுமையான போர் நடைபெற்று வருகிறது.
லட்சக்கணக்கான குடும்பங்களை சேர்ந்த உறவினர்கள் இந்த நாடுகளில் குறிப்பாக வளைகுடா பகுதிகளில் வசித்து வருகின்றனர்.
அங்குள்ள ஒரு கோடிக்கும் மேற்பட்ட இந்தியர்களுக்கு அனைத்து விதமான உதவிகளையும் வழங்கி வரும் வளைகுடா நாடுகளுக்கு நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்.
போர் நடைபெற்று வரும் இப்பகுதியானது நமது எரிசக்தித் தேவைகளுக்கான ஒரு முக்கிய மையமாகத் திகழ்கிறது. இதன் காரணமாக உலகம் முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் பற்றாக்குறை உருவாகி வருகிறது. இந்தியாவின் உலகளாவிய உறவுகள் மூலம் பல்வேறு நாடுகளிடம் இருந்து உதவிகள் கிடைக்கிறது.
இந்தியா இந்த சவால்களைத் துணிச்சலுடன் எதிர்கொண்டு வருகிறது. இது சந்தேகத்திற்கு இடமின்றி ஒரு சவாலான காலமாகும்.
இன்று ‘மன் கி பாத்’ வாயிலாக, நாட்டு மக்கள் அனைவருக்கும் வேண்டுகோள் விடுக்கிறேன். மேற்கு ஆசியாவின் போரால் உருவாகும் சவால்களை எதிர்கொள்ள ஒன்றிணைய வேண்டும். இந்த சவாலை வெற்றி கொள்வதற்கு அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று நான் மீண்டும் ஒருமுறை வலியுறுத்துகிறேன்.
இந்த பிரச்சினையை அரசியலாக்கும் அனைவரும் அவ்வாறு செய்வதைத் தவிர்க்க வேண்டும். 140 கோடி குடிமக்களின் நலன்களோடு இது தொடர்புடைய பிரச்சினையாகும்.
இதில் சுயநல அரசியலுக்கு எவ்வித இடமும் இல்லை. வதந்திகளைப் பரப்ப வேண்டாம். வதந்தியை பரப்புவோர் அனைவரும் நாட்டிற்குப் பெரும் தீங்கை விளைவித்து வருகின்றனர். நாட்டு மக்கள் அனைவரும் விழிப்புடன் இருக்குமாறும், வதந்திகளுக்கு பலியாகாமல் இருக்குமாறும் கேட்டுக் கொள்கிறேன்.
அரசு தொடர்ந்து தகவல்களை வழங்கி வருகிறது. அதனை நம்பி, அதன் அடிப்படையில் மட்டுமே உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள்.
கடந்த கால நெருக்கடிகளை வெற்றிகரமாக கடந்து வந்ததை போலவே, நாட்டின் 140 கோடி குடிமக்களின் கூட்டு வலிமையின் துணையோடு, இந்த முறையும் இந்தச் சவாலான சூழலை நாம் மிகுந்த வெற்றியுடன் கடந்து வருவோம் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.
20 ஓவர் உலக கோப்பையை வென்ற இந்திய அணி மிகவும் பாராட்டுதலுக்கு உரியதாகும். இந்திய வீரர்கள் நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளனர்.
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.