

பிரதமர் மோடி ஐக்கிய அரபு எமிரேட்ஸ், நெதர்லாந்து, சுவீடன், நார்வே, இத்தாலி ஆகிய 5 நாடுகளுக்கு அரசு முறை பயணமாக கடந்த 15-ந்தேதி புறப்பட்டார். இன்று அவர் நாடு திரும்பினார்.
இந்த நிலையில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய மந்திரி சபை கூட்டம் இன்று மாலை 5 மணிக்கு நடக்கிறது. இந்த கூட்டத்தில் அனைத்து மத்திய கேபினெட் மந்திரிகள், தனி பொறுப்பு வகிக்கும் இணை மந்திரிகள் மற்றும் பிற இணை மந்திரிகள் கலந்து கொள்கிறார்கள்.
அரசு திட்ட பணிகள், செயலாக்கம், மேற்காசிய போர் காரணமாக ஏற்பட்டு உள்ள பாதிப்புகள் குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படுகிறது. மேற்காசிய போரால் எரிபொருள் அதிகரிப்பு உள்ளிட்டவை தொடர்பாகவும் ஆலோசிக்கப்படுகிறது.
தற்போது நிலவி வரும் தேசிய பாதுகாப்பு, வெளியுறவு தொடர்பான சிக்கல்களை கையாள்வது குறித்தும் விவாதிக்கப்படுகிறது. மேலும் எரிசக்தி, விவசாயம், உரங்கள், விமான போக்குவரத்து, கப்பல் போக்குவரத்து மற்றும் தளவாடங்கள் போன்ற துறைகள் குறித்தும் பிரதமர் மோடி ஆலோசிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
சாதாரண மக்களின் நலனுக்காக அனைத்து துறைகளிலும் சீர்திருத்தம் கொண்டு வருவதில் அரசு அளிக்கும் முன்னுரிமை குறித்தும் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படுகிறது. அடுத்த 10 ஆண்டுகளுக்கான சீர்திருத்த முன்னுரிமைகளை பிரதமர் மோடி முன்பே சுட்டிகாட்டி இருந்தார்.
இதே போல மந்திரி சபையின் விரிவாக்கம் மற்றும் மாற்றியமைப்பு குறித்தும் இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்படலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது.
பல்வேறு அமைச்சகங்களின் செயல்பாடுகள், அவை எடுத்துள்ள முக்கிய முடிவுகள் மற்றும் அவற்றின் விளைவுகள் வருங்காலத்தில் முன்னுரிமை மற்றும் திருத்த நடவடிக்கை குறித்தும் விவாதிக்கப்படுகிறது.
மத்திய மந்திரி சபையில் தற்போது பிரதமர் மோடி உள்ளிட்ட 72 பேர் மந்திரிகளாக உள்ளனர். 81 பேர் வரை மத்திய மந்திரி சபையில் இடம் பெறலாம். அமைச்சரவை மாற்றத்தின் போது இளைஞர்களுக்கும், பெண்களுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று கூறப்படுகிறது. 50 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படுகிறது. இளமை மற்றும் அனுபவம் கொண்டதாக மந்திரி சபை மாற்றம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
7 மாநிலங்களில் தேர்தல் நடைபெற இருக்கிறது. தேர்தல் நடைபெறும் மாநிலங்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் மந்திரி சபையில் வாய்ப்பு கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.
புதிய பா.ஜனதா தேசிய செயலாளர்கள் நியமிக்கப்படுவது குறித்தும் இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்படுகிறது.
மேற்கு வங்காளம், அசாம் மாநிலங்களில் நடைபெற்ற தேர்தலில் பா.ஜனதா அபார வெற்றி பெற்றது. இதே போல புதுச்சேரியில் மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியை கைப்பற்றியது.
இந்த தேர்தலுக்கு பிறகு நடைபெறும் மத்திய மந்திரி சபை கூட்டம் முக்கியத்துவம் பெற்றதாக கருதப்படுகிறது. இந்த ஆண்டில் நடைபெறும் முதல் மந்திரிசபை கூட்டமாகும்.