என் மலர்
இந்தியா

முதல்வருக்கான அரசு இல்லத்தை காலி செய்தார் உத்தவ் தாக்கரே- மகாராஷ்டிர அரசியலில் அடுத்தடுத்த திருப்பம்
- எனது சொந்த எம்.எல்.ஏ.க்களே நான் முதல்-மந்திரியாக தொடர விரும்பவில்லை என்றால் நான் என்ன சொல்வது?
- எனது கட்சி தொண்டர்கள் கூறினால் சிவசேனா கட்சி தலைவர் பதவியில் இருந்து விலகவும் நான் தயாராக உள்ளேன்.
மும்பை:
மகாராஷ்டிராவில் சிவசேனாவை சேர்ந்த மூத்த மந்திரி ஏக்நாத் ஷிண்டேவால் சிவசேனா தலைமையிலான கூட்டணி ஆட்சிக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. அவர் சிவசேனாவை சேர்ந்த குறிப்பிட்ட எம்.எல்.ஏ.க்களை குஜராத் மாநிலத்துக்கு அழைத்து அங்குள்ள ஓட்டலில் தங்க வைத்து கட்சி தலைமைக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தினார். இந்த அதிருப்தி எம்எல்ஏக்கள் 34 பேர் சேர்ந்து, சட்டமன்ற கட்சி தலைவராக ஏக்நாத் ஷிண்டேவை நியமித்து இன்று தீர்மானம் நிறைவேற்றினர்.
இவ்வாறு அரசியல் குழப்பம் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில் மாநில முதல்-மந்திரியும், சிவசேனா தலைவருமான உத்தவ் தாக்கரே மாநில மக்களுக்கு இன்று உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-
நமது எம்.எல்.ஏ.க்களுக்கு என்ன ஆனது?, அவர்கள் எங்கு சென்றார்கள் அல்லது எங்கு கொண்டு செல்லப்பட்டார்கள் என்று நான் பேச விரும்பவில்லை. எனது உடல்நலம் மற்றும் அறுவை சிகிச்சை காரணமாக நான் கடந்த சில மாதங்களாக மக்களை சந்திக்கவில்லை என்பது உண்மை. ஆனால், தற்போது நான் மக்களை சந்திக்க தொடங்கிவிட்டேன். இது பாபாசாகிப்பின் சிவசேனா இல்லை என்று சிலர் கூறுகின்றனர். அவர்கள் பாபாசாகிப்பின் எண்ணங்கள் என்ன என்பதை கூறவேண்டும். இந்துத்துவாவை நமது வாழ்வாக கொண்டுள்ள அதே சிவசேனா தான் தற்போதும் உள்ளது. 2019-ல் 3 கட்சிகளும் ஒன்றாக வந்தபோது நான் தான் முதல்-மந்திரி பொறுப்பை எடுக்க வேண்டுமென சரத்பவார் கேட்டுக்கொண்டார். எனக்கு முன் அனுபவம் எதுவும் கிடையாது. ஆனால், நான் அந்த பொறுப்பை ஏற்றுக்கொண்டேன். சரத்பவாரும், சோனியா காந்தியும் எனக்கு உதவினார்கள். அவர்கள் என்மீது நம்பிக்கை வைத்தனர்.
நான் முதல்-மந்திரியாக தொடர எதேனும் எம்.எல்.ஏ. விரும்பவில்லையென்றால் நான் எனது உடைமைகளை எடுத்துக்கொண்டு முதல்-மந்திரி அலுவலகத்தில் இருந்து வெளியேறி எனது வீட்டிற்கு செல்ல தயார். எனது சொந்த எம்.எல்.ஏ.க்களே நான் முதல்-மந்திரியாக தொடர விரும்பவில்லை என்றால் நான் என்ன சொல்வது. எனக்கு எதிராக அவர்கள் எதாவது கூறுவதாக இருந்தால் அதை ஏன் சூரத்தில் இருந்து கூறவேண்டும்? அவர்கள் இங்கு (மும்பை) வந்து அதை என் முகத்திற்கு முன் கூறவேண்டும்.
நான் எனது ராஜினாமா கடிதத்தை எனது எம்.எல்.ஏ.க்களிடம் கொடுக்க தயாராக உள்ளேன். எனது எம்.எல்.ஏ.க்கள் இங்கு வந்து எனது ராஜினாமா கடிதத்தை பெற்றுக்கொண்டு கவர்னர் மாளிகைக்கு கொண்டு செல்ல வேண்டும். எனது கட்சி தொண்டர்கள் கூறினால் சிவசேனா கட்சி தலைவர் பதவியில் இருந்து விலகவும் நான் தயாராக உள்ளேன். ஆனால், அதை பிறர் கூறக்கூடாது. எனது கட்சி தொண்டர்கள் கூறவேண்டும். நீங்கள் (எம்.எல்.ஏ.க்கள்) கூறினால் நான் முதல்-மந்திரி பதவியில் இருந்து விலக தயார். இது எண்ணிக்கை சம்பந்தமானதல்ல. ஆனால், எத்தனைபேர் எனக்கு எதிராக உள்ளனர் என்பது பொறுத்தது. ஒரு நபர் அல்லது ஒரு எம்.எல்.ஏ. எனக்கு எதிராக இருந்தாலும் நான் முதல்-மந்திரி பதவில் இருந்து விலகுகிறேன். ஒரு எம்.எல்.ஏ. எனக்கு எதிராக இருந்தாலும் அது எனக்கு மிகவும் அவமானகரமானது. முதல்-மந்திரி பதவி வரும்... போகும்.. ஆனால், மக்களின் அன்பு தான் உண்மையான சொத்து. கடந்த 2 ஆண்டுகளாக நான் மக்களின் அன்பை பெற்றது எனக்கு மகிழ்ச்சி.
இவ்வாறு உத்தவ் தாக்கரே பேசினார்.
#WATCH Maharashtra CM Uddhav Thackeray along with his family leaves from his official residence, amid chants of "Uddhav tum aage badho, hum tumhare saath hain" from his supporters.#Mumbai pic.twitter.com/m3KBziToV6
— ANI (@ANI) June 22, 2022
இதையடுத்து சிவசேனா எம்எல்ஏக்கள் சிலர், ஏக்நாத் ஷிண்டேவுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தனர். பாஜகவுடன் சேர்ந்து சிவசேனா ஆட்சியமைக்க வேண்டும் என உத்தவ் தாக்கரேவுக்கு வேண்டுகோள் விடுத்தனர். தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரசுடன் இயற்கைக்கு மாறான கூட்டணி அமைத்துள்ள சிவசேனா அதிலிருந்து விலகவேண்டும் என ஏக்நாத் ஷிண்டே வலியுறுத்தினார்.
அதேசமயம், உத்தவ் தாக்கரே முதல்வராக இருக்கிறார், தொடர்ந்து முதல்வராக இருப்பார் என்று சிவசேனா தலைவர் சஞ்சய் ராவத் கூறினார். வாய்ப்பு கிடைத்தால் சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிப்போம் என்றும் அவர் தெரிவித்தார்.
இவ்வாறு அடுத்தடுத்த திருப்பங்களைத் தொடர்ந்து, முதல்வருக்கான அதிகாரப்பூர்வ அரசு இல்லத்தை உத்தவ் தாக்கரே காலி செய்தார். அந்த வீட்டில் இருந்து உத்தவ் தாக்கரே தனது குடும்பத்தினருடன், சொந்த வீட்டிற்கு சென்றார்.