search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    கவர்னருக்கு எதிராக தமிழக அரசு ரிட் மனு: மத்திய அரசு பதிலளிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    கவர்னருக்கு எதிராக தமிழக அரசு ரிட் மனு: மத்திய அரசு பதிலளிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு

    • கவர்னர் ஆர்.என்.ரவியின் செயல்பாட்டிற்கு எதிராக தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது.
    • இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட் மனு மீது பதிலளிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

    புதுடெல்லி:

    தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, அரசு உத்தரவுகளை நிறைவேற்றுவதில் தாமதம் செய்வதாகவும், மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் கிடப்பில் போடுவதால் அரசு பணிகள் முடங்கி உள்ளதாகவும் தமிழக அரசு குற்றம் சாட்டி வந்தது.

    கவர்னர் ஆர்.என்.ரவிக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் கடந்த 30-ம் தேதி தமிழக அரசு சார்பில் வழக்கு தொடரப்பட்டது. தமிழக அரசு தாக்கல் செய்த வழக்கு மனுவில், 'தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, அரசு உத்தரவுகளை நிறைவேற்றுவதில் தாமதம் செய்கிறார், மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் கிடப்பில் போடுகிறார். இதனால் அரசு பணிகள் முடங்கி உள்ளன. மேலும் அரசியல் சாசனம் வழங்கி உள்ள அதிகாரத்தை தவறாக பயன்படுத்துகிறார்.

    எனவே மசோதாக்களுக்கு கவர்னர் ஒப்புதல் அளிக்க கால வரம்பு நிர்ணயம் செய்ய உத்தரவிட வேண்டும்' என்று கூறப்பட்டு இருந்தது.

    இந்நிலையில், இந்த வழக்கு இன்று சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி சந்திரசூட் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. தமிழக அரசு சார்பில் மூத்த வக்கீல் அபிஷேக் சிங்வி உள்ளிட்டோர் ஆஜராகி வாதாடினார்கள். அவர்கள் தங்கள் வாதத்தின் போது கூறியதாவது:

    தமிழக அரசின் செயல்பாடுகளை கவர்னர் ஆர்.என்.ரவி முடக்குகிறார். தமிழக சட்டசபையில் நிறைவேற்றிய மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் காலதாமதம் செய்கிறார். கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்யும் கோப்பில் கூட அவர் கையெழுத்திடவில்லை. பணி நியமனம் தொடங்கி எந்த ஒரு கோப்புகளுக்கும் அனுமதி கொடுக்க கவர்னர் மறுப்பு தெரிவிக்கிறார். 2020-ம் ஆண்டு முதல் பல மசோதாக்கள் கிடப்பில் போடப்பட்டு உள்ளன. இதனால் தமிழக அரசின் உரிமை மட்டுமல்ல, தனி நபரின் உரிமையும் பறிக்கப்படுகிறது. அரசின் முக்கிய பணியிடங்களை முடக்குவதற்கான மசோதாக்களை கூட கவர்னர் கண்டு கொள்ளவில்லை.

    தமிழ்நாடு முதல் காஷ்மீர் வரை கவர்னர்களால் ஏற்படும் பிரச்சினையை சொல்லும் வகையில் வழக்கை தொடர்ந்து உள்ளோம்.

    இவ்வாறு அவர்கள் வாதாடினார்கள்.

    அவர்களிடம் நீதிபதி, 'தமிழக கவர்னருக்கு எதிரான வழக்கை மிகவும் முக்கியமானதாக பார்க்கிறோம். கவர்னருக்கு எதிரான தமிழக அரசின் வழக்கை தீபாவளி விடுமுறைக்கு பிறகு விசாரிக்கலாமா' என்று கேட்டனர்.

    பின்னர் இந்த வழக்கில் எதிர் மனுதாரருக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர். கவர்னரின் செயலாளர் மற்றும் மத்திய உள்துறை அமைச்சகத்துக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர். அதன்பின் இந்த வழக்கு விசாரணையை வரும் 24-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர். மேலும் அன்று மத்திய அரசு வக்கீல்கள் ஆஜராக உத்தரவிட்டனர்.

    Next Story
    ×