PM Modi | பண்பாட்டு உலகிற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு... புகைப்பட கலைஞர் ரகு ராய் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்

அவரது ஒளிப்படக்கலை, இணையற்ற உணர்திறனையும், ஆழத்தையும், பன்முகத்தன்மையையும் கொண்டிருந்தது.
PM Modi | பண்பாட்டு உலகிற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு... புகைப்பட கலைஞர் ரகு ராய் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்
Published on

புற்றுநோய் மற்றும் வயது முதிர்வு காரணமாக உயிரிழந்த பிரபல புகைப்பட கலைஞர் ரகு ராய் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்த எக்ஸ் தள பதிவில், "திரு. ரகு ராய் அவர்கள், தனது ஒளிப்படக் கருவியின் வழியாக இந்தியாவின் உயிர்த்துடிப்பை படம்பிடித்துக் காட்டிய ஒரு படைப்பாற்றல் மிக்க பெருந்தகையாக என்றும் நினைவுகூரப்படுவார். அவரது ஒளிப்படக்கலை, இணையற்ற உணர்திறனையும், ஆழத்தையும், பன்முகத்தன்மையையும் கொண்டிருந்தது.

அது, இந்திய வாழ்வியலின் பல்வேறு பரிமாணங்களை மக்களிடத்தில் இன்னும் நெருக்கமாக கொண்டு சேர்த்தது. அவரது மறைவு, ஒளிப்படக்கலை மற்றும் பண்பாட்டு உலகிற்கு ஈடுசெய்ய முடியாத ஒரு பேரிழப்பாகும்.

துயரம் சூழ்ந்த இந்நேரத்தில், அவரது குடும்பத்தினர், அவரைப் போற்றுவோர் மற்றும் ஒளிப்படக்கலைச் சமூகத்தினர் ஆகியோருடன் எனது எண்ணங்கள் துணை நிற்கின்றன. ஓம் சாந்தி," எனகுறிப்பிட்டுள்ளார்.

மறைந்த புகைப்பட கலைஞர் ரகு ராய் இந்தியாவின் கலாச்சாரம் மற்றும் வாழ்வியலைப் பிரதிபலிக்கும் 18க்கும் மேற்பட்ட புத்தகங்களை வெளியிட்டுள்ளார்.1971ல் நடந்த வங்கதேசப் போரைத் துணிச்சலுடன் பதிவு செய்ததற்காக, 1972ம் ஆண்டே இந்திய அரசு அவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவித்தது.

வெறுமனே படங்களை எடுப்பவராக இல்லாமல், அப்படங்களின் வழியே ஒரு கதையையும், காலத்தின் வலியையும் பதிவு செய்த அந்த மகா கலைஞனின் மறைவு புகைப்படத் துறையில் ஒரு பெரிய வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com