காசி விஸ்வநாதர் கோவிலில் பிரதமர் மோடி சிறப்பு வழிபாடு

பிரதமர் மோடிக்கு சிவபெருமானின் அடையாளங்களான உடுக்கை, திரிசூலம் வழங்கப்பட்டது.
காசி விஸ்வநாதர் கோவிலில் பிரதமர் மோடி சிறப்பு வழிபாடு
Published on

பிரதமர் மோடி 2 நாள் சுற்றுப்பயணமாக தனது சொந்த தொகுதியான உத்தரபிரதேச மாநிலம் வாரணாசிக்கு சென்றார். நேற்று அங்கு நடைபெற்ற அரசு விழாவில் ரூ.1050 கோடி மதிப்பில் பணி நிறைவடைந்த 48 திட்டங்களை தொடங்கி வைத்த அவர் ரூ.5300 கோடி மதிப்பிலான 112 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். அங்கு நடைபெற்ற மகளிர் மாநாட்டிலும் பிரதமர் மோடி பங்கேற்று பேசினார்.

இரவு அங்குள்ள பரேகா விருந்தினர் மாளிகையில் தங்கினார். இதனை தொடர்ந்து 2-ம் நாளான இன்று காலை, பிரதமர் மோடி பரேகா விருந்தினர் மாளிகையில் இருந்து காசி விஸ்வநாதர் கோவிலுக்கு புறப்பட்டார்.

பரேகா விருந்தினர் மாளிகையின் பிரதான நுழைவாயிலில் இருந்து அவர் ரோடு ஷோவாக மக்களை சந்தித்தவாறு சென்றார். சுமார் 12 கிலோமீட்டர் தூரம் ரோடு ஷோவாக வந்து கோவிலை அடைந்தார்.

அவர் வரும் பாதை முழுவதும் ஏராளமான பொதுமக்கள், பா.ஜ.க. தொண்டர்கள் திரண்டிருந்தனர். பிரதமரை தொண்டர்கள் மிகுந்த உற்சாகத்துடன் மலர்களைத் தூவி வரவேற்றனர். கோவில் அருகே ஏராளமான பெண்கள் பிரதமர் மோடியை மலர் தூவி வரவேற்றனர். காசி விஸ்வநாதர் கோவிலை அடைந்ததும் அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கு திரண்டிருந்த மக்கள், குழந்தைகளை சந்தித்து பிரதமர் மோடி உரையாடினார். அதனை தொடர்ந்து கோவிலுக்குள் சென்ற பிரதமர் மோடி காசி விஸ்வநாதருக்கு அபிஷேகம் செய்து, நாட்டின் மகிழ்ச்சி மற்றும் செழிப்புக்காக பிரார்த்தனை செய்தார்.

பிரதமர் மோடி காசி விஸ்வநாதர் கோவிலில் சோடஷ உபசார முறையில் சிறப்பு வழிபாடு நடத்தினார். ‘சோடஷ’ என்றால் 16 என்றும், ‘உபசாரம்’ என்றால் சேவை அல்லது வழிபாட்டு முறை என்றும் பொருள். சிறப்பு வழிபாட்டை முடித்துவிட்டு பிரதமர் மோடி கோவிலில் இருந்து வெளியே வந்தபோது அவருக்கு சிறப்பு மரியாதை செய்யப்பட்டது. அப்போது கோவிலுக்கு வெளியே திரண்டிருந்த மக்கள் “ஜெய் ஸ்ரீ ராம்” மற்றும் “ஹர் ஹர் மஹாதேவ்” என்று முழக்கமிட்டனர்.

பிரதமர் மோடிக்கு சிவபெருமானின் அடையாளங்களான உடுக்கை, திரிசூலம் வழங்கப்பட்டது. பிரதமர் மோடி, ​​ ஒரு கையில் உடுக்கையையும், மறுகையில் திரிசூலத்தையும் கையில் ஏந்தியபடி மக்களை நக்கி காண்பித்து மக்களின் வாழ்த்துகளையும் ஏற்றுக்கொண்டார்.

பின்னர் பிரதமர் மோடி பாபத்பூர் விமான நிலையத்திற்குச் சென்று அங்கிருந்து ஹர்தோய்க்கு விமானத்தில் புறப்பட்டார். ஹர்தோயில் நடைபெற்ற விழாவில் கங்கா விரைவுச் சாலையை பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார். கங்கா விரைவுச் சாலை சுமார் 594 கிமீ நீளம் கொண்டது. இது 12 மாவட்டங்கள் மற்றும் 519 கிராமங்கள் வழியாக செல்கிறது. இந்த 6 வழி விரைவுச் சாலை வரும் காலத்தில் ஹரித்வார் மற்றும் ஜெவார் விமான நிலையங்களுடனும் இணைக்கப்படும்.

தொடர்ந்து மல்லாவன் நகரில் உள்ள பந்திப்பூர் வெட்டுப் பகுதிக்கு அருகில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் பேசுகிறார். கூட்டத்தில் உத்தர பிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் மற்றும் துணை முதல்-மந்திரிகள் பங்கேற்கிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com