

பிரதமர் மோடி இன்று ராஜஸ்தான் மாநிலம் செல்கிறார். அங்கு செல்லும் அவர் ஜோத்பூர் விமான நிலையத்தின் புதிய முனையத்தை திறந்து வைக்கிறார். அத்துடன் பார்மர் மாவட்டம் பச்பத்ராவில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையை திறந்து வைத்து நாட்டிற்கு அர்ப்பணிக்கிறார்.
பிரதமர் திறந்து வைக்க இருக்கும் ஜோத்பூர் விமான நிலையத்தின் புதிய முனையத்தை அம்மாநில முதல்வர் பஜன் லால் சர்மா நேற்று ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறுகையில் "நாளை (இன்று) ராஜஸ்தான ராயல்ஸ் முக்கியமான பரிசை பெற இருக்கிறது. நம் நாட்டின் பிரதமர் மோடி ஜோத்பூர் வரவிருக்கிறார். சிறந்த முனையம் கட்டப்பட்டு ஜோத்பூரில் தயாராக இருக்கிறது. இதன் தொடக்க விழா நடக்கப்போகிறது" என்றார்.
அத்துடன் நீண்ட காலமாக காத்திருக்கும் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையமும் திறந்து வைக்கப்பட இருக்கிறது. இது மாநிலத்திற்கு மிகப்பெரிய மைல்கல் எனத தெரிவித்தார்.
ஜோத்பூர் விமான நிலையத்தின் புதிய முனையம் 29 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ளது. நாட்டின சாதாரண குடிமகனும் விமானத்தில் பயணிக்கட்டும் என்ற உடான் திட்டத்தின் கீழ் இந்த முனையம் கட்டப்பட்டுள்ளது.
இந்த விழாவில் ஆளுநர் ஹரிபாவ் கிசன்ரவா் பாக்டே, மத்திய விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் கிஞ்சராபு ராம்மோகன் நாயுடு, கஜேந்திர சிங் ஷெகாவத், முரளிதர் மோஹோல் உள்ளிட்ட மத்திய அமைச்சர்களும் கலந்து கொள்கிறார்கள்.
இதனைத் தொடர்ந்து இந்தோனோசியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளுக்கு 6 நாள் பயணம் மேற்கொள்ள இருக்கிறார். சுற்றுப்பயணத்தின் முதல் கட்டமாக பிரதமர் மோடி இந்தோனேஷியா செல்கிறார். கடந்த ஆண்டு இந்திய குடியரசு தின விழாவில் இந்தோனேஷிய அதிபர் பிரபோவோ சுபியாண்டோ சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். இந்த பின்னணியில் பிரதமர் மோடியின் இந்தோனேஷியா பயணம், இரு நாடுகளின் மூலோபாய மற்றும் பொருளாதார உறவுகளை மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதன்பின்னர் பிரதமர் மோடி ஆஸ்திரேலியா செல்கிறார். அங்கு ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானிசை சந்தித்து, இருநாடுகளுக்கிடையேயான கூட்டாண்மை, வர்த்தகம், முதலீடு, பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விரிவாக ஆலோசனை நடத்த உள்ளார்.
மேலும், வருகிற 9-ந்தேதி மெல்போர்னில் ஆஸ்திரேலியா- இந்தியா அறக்கட்டளை சார்பில் நடைபெறும் புலம்பெயர் இந்தியர்கள் சங்கம நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றுகிறார். ஆஸ்திரேலிய பயணத்தை தொடர்ந்து பிரதமர் மோடி நியூசிலாந்துக்கு செல்கிறார். பிரதமராக பொறுப்பேற்ற பிறகு அவர் மேற்கொள்ளும் முதல் நியூசிலாந்து பயணம் இதுவாகும்.
கடைசியாக 1986-ம் ஆண்டு பிரதமராக இருந்த ராஜீவ் காந்தி நியூசிலாந்து நாட்டுக்கு பயணம் மேற்கொண்டார். இந்த நிலையில் சுமார் 40 ஆண்டுகளுக்கு பிறகு பிரதமர் மோடி நியூசிலாந்துக்கு செல்வது குறிப்பிடத்தக்கது.