PM Modi | கொரோனா காலத்தை போல் மீண்டும் ஆன்லைன் வகுப்பு - பிரதமர் மோடி வலியுறுத்தல்!

அமெரிக்கா போரால் கச்சா எண்ணெய் இறக்குமதி பாதிக்கப்பட்டுள்ளது.
PM Modi | கொரோனா காலத்தை போல் மீண்டும் ஆன்லைன் வகுப்பு - பிரதமர் மோடி வலியுறுத்தல்!
Published on

ஈரான் - அமெரிக்கா இடையிலான போர் காரணமாக ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடியை சமாளிக்க பல்வேறு யோசனைகளை பிரதமர் தொடர்ந்து வழங்கி வருகிறார். அந்த வகையில், கல்வி நிறுவனங்கள் ஆன்லைன் வழியில் மாணவர்களுக்கு வகுப்புகளை நடத்த தொடங்கலாம் எனவும் நிறுவனங்கள் வீட்டில் இருந்து பணிபுரியும் முறையை கொண்டு வரலாம் எனவும் அறிவுறுத்தி உள்ளார்.

நேற்றும் கூட இதை அறிவுறுத்திய நிலையில் பிரதமர் மோடி மீண்டும் அதே விவகாரம் குறித்து பேசியுள்ளார். மேற்காசிய போர் காரணமாக சர்வதேச அளவில் எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்தியா தனது எரிபொருள் தேவைக்கு சுமார் 90 சதவீதம் அளவுக்கு இறக்குமதியையே சார்ந்துள்ளது. ஈரான் மீதான அமெரிக்கா போரால் கச்சா எண்ணெய் இறக்குமதி பாதிக்கப்பட்டுள்ளது.

இதனால் ஏற்பட்டுள்ள நெருக்கடியை சமாளிக்க பெட்ரோல், டீசலை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்றும் பிரதமர் மோடி அறிவுறுத்தி வருகிறார். அதுமட்டுமின்றி கொரோனா காலத்தை போல சாத்தியமுள்ள நிறுவனங்கள் ஊழியர்களுக்கு வீட்டில் இருந்து பணிபுரியும் வசதியை வழங்க வேண்டும் என்றும், மக்கள் ஓராண்டுக்கு தங்கம் வாங்குவதை நிறுத்த வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

இந்த நிலையில், குஜராத் மாநிலம் வதோதராவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசும் போது, "கொரோனா பெருந்தொற்றில் தொடங்கிய உலகளாவிய நிலையற்ற சூழல் இன்னும் நீடித்து வருகிறது. தற்போது மேற்கு ஆசியாவில் நடைபெற்று வரும் மோதல் காரணமாக அந்த நிலைமை மேலும் மோசமடைந்துள்ளது. நாட்டு மக்களுக்கு நான் விடுக்கும் கோரிக்கை என்னவென்றால் பெட்ரோல் மற்றும் டீசலின் பயன்பாட்டை முடிந்தவரை குறைக்க வேண்டும்.

மெட்ரோ ரயில், மின்சார பேருந்துகள் மற்றும் பொதுப் போக்குவரத்தை அதிகமாக பயன்படுத்த வேண்டும். மேலும், கார்பூலிங்கை ஊக்குவிக்க வேண்டும். கார் வைத்திருப்பவர்கள் ஒரே வாகனத்தில் அதிகமானவர்களை அழைத்து செல்ல வேண்டும். டிஜிட்டல் தொழில்நுட்பம் தற்போது பல விஷயங்களை மிகவும் எளிதாக்கியுள்ளது. தொழில்நுட்பத்தின் உதவி நமக்கு மிகுந்த பயனளிக்கும்.

அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் ஆன்லைன் கூட்டங்கள் மற்றும் வீட்டில் இருந்து பணிபுரியும் முறைக்கு முன்னுரிமை வழங்க வேண்டும். எரிபொருள் பயன்பாட்டை குறைத்து நாட்டின் பொருளாதார நிலைத்தன்மைக்கு ஆதரவு அளிக்கும் வகையில், கல்வி நிறுவனங்கள் தற்காலிகமாக கொரோனா காலத்தைப் போல ஆன்லைன் வகுப்பு முறையை பின்பற்றலாம்" என்று கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com