

புதுடெல்லி:
உலகின் பிரபலமான தலைவர்கள் குறித்து அமெரிக்காவை சேர்ந்த தரவு பகுப்பாய்வு நிறுவனமான ‘மார்னிங் கன்சல்ட்’ உலகளாவிய கருத்து கணிப்பை மேற்கொண்டது. கடந்த 2-ந்தேதி முதல் 8-ந்தேதி வரையிலான காலக்கட்டத்தில் பொதுமக்களிடம் இந்த ஆய்வை மேற்கொண்டது.
அதன்படி பிரதமர் மோடி உலகின் பிரபலமான தலைவராக தொடர்ந்து 2-வது ஆண்டாக முதலிடம் பிடித்துள்ளார்.
அவருக்கு 68 சதவீதம் ஆதரவு உள்ளது. பிரதமர் மோடிக்கு உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் புகழும், அங்கீகாரமும் அதிகரித்துள்ளது. இது அவரது ஆட்சி, திட்டங்கள் மற்றும் சர்வதேச அளவிலான செயற்பாடுகளுக்கான ஆதரவாக பார்க்கப்படுகிறது.
பிரதமர் மோடிக்கு அடுத்தப்படியாக சுவிட்சர்லாந்து அதிபர் பார்மெலின் 62 சதவீத ஆதரவுடன் 2-வது இடத்திலும், தென்கொரியா அதிபர் லீ ஜேம் யுங் அதே 62 சதவீதத்துடன் 3-வது இடத்திலும் உள்ளனர்.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்புக்கு 39 சதவீத ஆதரவே உள்ளது. அவர் 14-வது இடத்தில் உள்ளார். ஈரான் மீது போர் தொடுத்ததால் அவருக்கு சரிவு ஏற்பட்டுள்ளது.
இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மருக்கு 24 சதவீதமும், ஜெர்மனியின் பிரெட்ரிக் மெர்சுக்கு 20 சதவீதமும், பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மக்ரானுக்கு 17 சதவீதமும் பெற்று பின் தங்கி காணப்படுகிறார்கள்.
26 சதவீதம் பேர் தலைமைத்துவத்தை ஏற்கவில்லை என்று பதில் அளித்தனர். அதே நேரத்தில் 6 சதவீதம் பேர் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டனர்.