சிக்கிமில் இளைஞர்களுடன் கால்பந்து விளையாடி மகிழ்ந்த பிரதமர் மோடி

இது பிரதமரின் நாடு தழுவிய அளவில் விளையாட்டு மற்றும் உடற்பயிற்சியை ஊக்குவிப்பதற்கான முயற்சியாக அமைந்துள்ளது என்று பயனர்கள் பாராட்டினர்.
சிக்கிமில் இளைஞர்களுடன் கால்பந்து விளையாடி மகிழ்ந்த  பிரதமர் மோடி
Published on

மேற்கு வங்கத்தில் தேர்தல் பிரசாரத்தை முடித்த பிரதமர் மோடி சிக்கிம் மாநிலம் நிறுவப்பட்டதன் 50-வது ஆண்டு விழா கொண்டாட்டங்களின் நிறைவு விழாவில் பங்கேற்பதற்காக நேற்று கேங்டாக் வந்தார். அங்கு நடைபெறும் விழாவில் இன்று ரூ.4,000 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைக்கிறார்.

சிக்கிம் வந்த பிரதமர் மோடியை, லிபிங் ஹெலிகாப்டர் தளத்தில் கவர்னர் ஓம் பிரகாஷ் மாத்தூர் மற்றும் முதல்-மந்திரி பிரேம் சிங் தமாங் ஆகியோர் வரவேற்றனர்.

இன்று காலை பிரதமர் மோடி சிக்கிமின் காங்டாக்கில் குழந்தைகள், இளைஞர்களுடன் கால்பந்து விளையாடி மகிழ்ந்தார். இது தொடர்பான எக்ஸ் தளத்தில் ஒரு காணொலியைப் பதிவிட்ட பிரதமர் மோடி, “இனிய காங்டாக் காலைப்பொழுதில் சிக்கிமில் உள்ள என் இளம் நண்பர்களுடன் கால்பந்து விளையாடுவதைப் போல் வேறொன்றும் இல்லை!” என்று எழுதியிருந்தார்.

அந்தக் காணொலியில், அவர் ஒரு கால்பந்து மைதானத்தில் இளைஞர்களுடன் உரையாடுவதும், விளையாட்டில் தீவிரமாகப் பங்கேற்பதும் பதிவாகி இருந்தது.

தனது 2-வது பதிவில் பிரதமர் மோடி, ‘நிச்சயமாக, இந்த இளைஞர்களுடன் ஒரு அருமையான கால்பந்துப் பயிற்சி!’ என்று எழுதியிருந்தார்.

இந்த காட்சிகள் இணையத்தில் வைரலாகின. இது பிரதமரின் நாடு தழுவிய அளவில் விளையாட்டு மற்றும் உடற்பயிற்சியை ஊக்குவிப்பதற்கான முயற்சியாக அமைந்துள்ளது என்று பயனர்கள் பாராட்டினர்.

முன்னதாக பிரதமர் மோடி ஹெலிகாப்டர் தளத்தில் இருந்து லோக் பவன் வரை ரோடு ஷோ நடத்தினார். பிரதமர் மோடியை காணும் ஆவலில் பெருந்திரளான மக்கள் வீதிகளில் வரிசையாக நின்று உற்சாகமாக வரவேற்பு அளித்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com