

ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமை அன்று பிரதமர் மோடி ‘மன் கி பாத்’ நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார்.
இந்நிலையில், 134-வது மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி இன்று பேசினார். அப்போது பிரதமர் மோடி, தமிழகத்தைச் சேர்ந்த பள்ளி ஆசிரியையை பாராட்டினார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:
சமீபத்தில் நாகர்கோவிலில் நான் ஒரு ஆசிரியையை சந்தித்தேன். அவரை நான் ஏறக்குறைய 30 ஆண்டுக்கு முன்பும் சந்தித்து இருந்தேன்.
நான் குறிப்பிடுவது கிரிஜாவை பற்றிதான். இந்தச் சந்திப்பின்போது பல இளம் மாணவர்களும் உடன் இருந்தனர். கிரிஜா ஏறக்குறைய 15 பள்ளிகள் நடத்தி வருகிறார். அவற்றுள் சென்னையில் அமைந்துள்ள ஒரு பள்ளி முதன்மையான கல்வி நிறுவனமாக திகழ்கிறது. அவரது தேச பக்தி உணர்வு ஒவ்வொரு இந்தியருக்கும் உண்மையிலேயே ஊக்கம் அளிப்பதாக உள்ளது.
மன் கி பாத் நிகழ்ச்சியில் இருந்து உத்வேகம் பெற்ற கிரிஜா நாட்டின் வீரர்களின் நலனுக்காக தானும் பங்களிக்க வேண்டும் என உறுதி ஏற்றார். அந்த நோக்கத்தை முன்னிட்டு, தனது பள்ளிகள் அனைத்திலும் பயிலும் மாணவர்களை இதில் பங்கேற்கும்படி அவர் ஊக்கப்படுத்தினார்.
ஒவ்வொரு குழந்தையும் தினமும் 1 ரூபாய் வீதம் பங்களிக்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார். ஓராண்டு காலத்தில் ஒவ்வொரு மாணவரும் ரூ.365-ஐ பங்களித்தனர். இத்தகைய சிறிய முயற்சியால் ஏறக்குறைய ரூ.40 லட்சம் திரட்டப்பட்டது.
இந்த முழு தொகைக்குமான காசோலையை கிரிஜா என்னிடம் ஒப்படைத்தார். அவருடன் நான் உரையாடியபோது தான் அவருக்குள்ள தேச பக்தி எவ்வளவு ஆழமானது என்பதை உணர்ந்து கொண்டேன் என தெரிவித்தார்.