

மேற்கு வங்காள சட்டசபை தேர்தலையொட்டி, 'என் வாக்குச்சாவடி, வெற்றி வாக்குச்சாவடி' என்ற தலைப்பில் அம்மாநில பா.ஜ.க. தொண்டர்களுடன் பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் உரையாடினார்.
அதில் அவர் பேசியதாவது:-
மேற்கு வங்காளத்தில் முன்பு இருந்த கம்யூனிஸ்டு அரசின் அராஜகங்களில் இருந்து தங்களை விடுவித்துக் கொள்ளத்தான் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு மக்கள் வாக்களித்தனர். ஆனால், அக்கட்சி ஆட்சிக்கு வந்தவுடன், கம்யூனிஸ்டு கட்சியையே மிஞ்சி விட்டது. இளைஞர்கள் வேலைவாய்ப்பு குறித்து கவலைப்படுகின்றனர். உருளைக்கிழங்கு விவசாயிகள், திரிணாமுல் காங்கிரஸ் சிண்டிகேட் குறித்து பயப்படுகிறார்கள். அரசு ஊழியர்கள், நிலுவைத்தொகையை பெற கோர்ட்டை அணுகுகிறார்கள்.
மேற்கு வங்காளம் முழுவதும் பீதியான சூழ்நிலை நிலவுவதை என்னால் பார்க்க முடிகிறது. கொலை, கற்பழிப்பு, கலவரம், அரசியல் வன்முறை ஆகியவை உச்சத்தை எட்டி விட்டன. எல்லோரும் பாதிக்கப்பட்டுள்ளனர். திரிணாமுல் அரசு, மாமூல் வாங்கும் அரசாக உள்ளது. ஊழலை நிறுவனமயமாக்கி விட்டது.
ஊடுருவல்காரர்கள் குறித்து மக்களிடையே பெரிய கவலை உள்ளது. பல இடங்களில், அவர்களால் மக்கள்தொகைக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களில் மேற்கு வங்காளத்தின் ஒவ்வொரு பகுதிக்கும் சென்று மக்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. பா.ஜ.க. தொடர்பாக அவர்களிடம் நிலவும் ஆர்வம், ஆற்றல், உற்சாகம் ஆகியவை குறிப்பிடத்தக்கவை. இதற்கு பா.ஜ.க. வாக்குச்சாவடிமட்ட தொண்டர்களின் கடின உழைப்பே காரணம். ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் உங்களது கடின உழைப்பை பார்க்கிறேன். இது இதயத்தை தொடும் நிகழ்வாக இருக்கிறது. இதனால் கீழ்மட்ட அளவில் கட்சி சென்றடைகிறது.
பா.ஜ.க.வின் தேர்தல் அறிக்கைக்கு மக்களிடையே பாராட்டு கிடைத்துள்ளது. பெண்களை அணுகி, ஆர்.ஜி.கர் ஆஸ்பத்திரியில் நடந்த பாலியல் பலாத்காரம், சந்தேஷ்காலி வன்முறை ஆகியவற்றை நினைவுபடுத்துங்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.