

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அதிகாரப்பூர்வப் பயணமாக ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகருக்கு வரவிருக்கும் நிலையில், இணையதளத்தில் அவருக்கு விடுக்கப்பட்ட கொலை மிரட்டல் பதிவு ஆஸ்திரேலியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விவகாரத்தை ஆஸ்திரேலிய மத்திய கூட்டாட்சி போலீஸார் தீவிரமாக கையில் எடுத்து, உயர்மட்ட விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.
வரும் 9 ஆம் தேதி மெல்போர்னில் உள்ள மார்வெல் ஸ்டேடியத்தில் நடைபெறவுள்ள 'மெல்போர்ன் மீட்ஸ் மோடி' என்ற பிரம்மாண்ட இந்திய வம்சாவளியினர் சமூகக் கூட்டத்தை விளம்பரப்படுத்தும் முகநூல் பதிவின் கீழ் இந்த அதிர்ச்சிகரமான மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
'அபு முஸ்தபா' என்ற பெயரிலான கணக்கிலிருந்து, "நிகழ்ச்சியின் போது மைதானத்தின் மேற்கூரையை மூடி வைப்பது நல்லது, இல்லையென்றால் அவர் மரணத்தை நோக்கியே ஆஸ்திரேலியா வருகிறார்" என்று கொடூரமான முறையில் ஆங்கிலத்தில் கமெண்ட் செய்யப்பட்டுள்ளது.
இந்த மிரட்டல் செய்தி இணையத்தில் வெளியான அதே நாளில் ஆஸ்திரேலிய போலீஸாரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், அவர்கள் உடனடியாக களத்தில் இறங்கியுள்ளனர்.
முதற்கட்ட விசாரணையில், குறிப்பிட்ட அந்த மிரட்டல் பதிவை வெளியிட்ட நபரின் ஐபி முகவரியை போலீஸார் துல்லியமாகக் கண்டறிந்துள்ளதாகவும், அதன் பின்னணியில் உள்ள நபர்கள் குறித்து தீவிரமாக ஆராய்ந்து வருவதாகவும் ஆஸ்திரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
வெளிநாட்டு அரசுத் தலைவர்கள் தங்கள் நாட்டிற்கு வரும்போது அவர்களுக்கு விடுக்கப்படும் இதுபோன்ற மிரட்டல்களை மிகக் கடுமையான குற்றமாக ஆஸ்திரேலிய சட்ட அமலாக்க முகமைகள் கருதுவதால், இந்த விவகாரத்தில் குற்றவாளிகளைக் கண்டறிய தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
பிரதமரின் இந்த முக்கியப் பயணத்தின் போது இருதரப்பு அரசு முறை பேச்சுவார்த்தைகள் மட்டுமின்றி, பல்வேறு சமூக நிகழ்ச்சிகளும் திட்டமிடப்பட்டுள்ளதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலமடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளன.
ஆஸ்திரேலிய கூட்டாட்சி போலீஸ், மாநில போலீஸ் மற்றும் சிறப்புப் பாதுகாப்புப் பிரிவினர் இணைந்து மார்வெல் ஸ்டேடியம் மற்றும் பிரதமர் மோடி செல்லும் அனைத்து இடங்களிலும் முன்னெப்போதும் இல்லாத வகையில் உச்சக்கட்டப் பாதுகாப்பு வளையத்தை அமைத்து வருகின்றனர்.
உலகத் தலைவர்கள் பங்கேற்கும் சர்வதேசக் கூட்டங்களுக்கு இணையான பாதுகாப்பை உறுதி செய்ய அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ள நிலையில், இந்த ஆன்லைன் மிரட்டல் விவகாரம் ஆஸ்திரேலியா மற்றும் இந்திய பாதுகாப்பு வட்டாரங்களில் பலத்த பாதுகாப்புக் கெடுபிடிகளை ஏற்படுத்தியுள்ளது.