ரோஸ்கர் மேளா: ஒரே நாளில் 51,000 பேருக்கு மத்திய அரசு வேலை- பணி நியமன ஆணையை வழங்கிய பிரதமர் மோடி

10 லட்சம் பேரை மத்திய அரசு பணியில் சேர்க்கும் ரோஸ்கர் மேளா திட்டத்தின் ஒரு பகுதியாக இன்று 51 ஆயிரம் பேருக்கு பிரதமர் மோடி பணி நியமன ஆணை வழங்கினார்.
ரோஸ்கர் மேளா: ஒரே நாளில் 51,000 பேருக்கு மத்திய அரசு வேலை- பணி நியமன ஆணையை வழங்கிய பிரதமர் மோடி
Published on

மத்திய அரசுப் பணிகளில் இளைஞர்களை அதிக அளவில் சேர்க்கும் நோக்கில், பிரதமர் நரேந்திர மோடி இன்று நடைபெற்ற பிரமாண்ட 'ரோஸ்கர் மேளா' மூலம் 51,000-க்கும் மேற்பட்டோருக்குப் பணி நியமன ஆணையை காணொளி வாயிலாக வழங்கியுள்ளார்.

இந்தியாவின் வளர்ச்சியை வேகப்படுத்த இளைஞர் சக்தியைப் பயன்படுத்துவதில் மத்திய அரசு உறுதியாக உள்ளதாகப் பிரதமர் இந்நிகழ்வில் பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளார்.

மத்திய அரசின் வேலைவாய்ப்பு இலக்கை எட்டும் நோக்கில் கொண்டு வரப்பட்ட இத்திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் இதுவரை 18 முறை இதுபோன்ற வேலைவாய்ப்புத் திருவிழாக்கள் நடத்தப்பட்டுள்ளன.

இதன் மூலம் ஒட்டுமொத்தமாகச் சுமார் 12 லட்சம் இளைஞர்களுக்கு மத்திய அரசுப் பணிக்கான ஆணைகள் வழங்கப்பட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளது. இன்றைய தினம் மட்டும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் உள்ள 47 முக்கிய இடங்களில் இந்த 'ரோஸ்கார் மேளா' ஒரே நேரத்தில் வெற்றிகரமாக நடத்தப்பட்டது.

மத்திய அரசுப் பணிக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ள இளைஞர்களை அனைவரையும் ரெயில்வே துறை, உள்துறை, நிதித்துறை, சுகாதாரத்துறை மற்றும் உயர்கல்வித்துறைகளில் மத்திய அரசு ஊழியர்களாகப் பணியமர்த்தப்படுகிறார்கள்.

பணி ஆணை பெற்ற இளைஞர்களிடையே உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, "நாடு முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு இன்றைய நாள் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நாளாகும். நீங்கள் அனைவரும் நாட்டின் வளர்ச்சிப் பயணத்தில் மிக முக்கியப் பங்காளிகளாக மாறுகிறீர்கள்.

இந்தியாவின் தொழில்நுட்ப வளர்ச்சியையும், இளைஞர்களின் திறமையையும் கண்டு உலகமே வியந்து போய் உள்ளது. இன்று ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்தில் தங்களையும் இணைத்துக் கொள்ள ஆசைப்படுகிறது.

'வளர்ந்த இந்தியா' (Viksit Bharat) என்ற உன்னத லட்சியத்தை நிறைவேற்றப் புதிய பொறுப்புகளை ஏற்கும் உங்களுக்கும், உங்களை வளர்த்தெடுத்த உங்கள் குடும்பத்தினருக்கும் என் நெஞ்சார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்' என்றார்.

இளைஞர் சக்திக்கு (YUVA SHAKTI ) புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கி கொடுத்ததற்காகவும், அவர்களின் எதிர்காலத்தையும் நினைத்து அவர்களுக்காக அதிகாரமளிப்பதில் தற்போதைய அரசு என்றைக்குமே தொடர்ந்து முன்னுரிமை அளிக்கும் என அதிகாரிகள் தரப்பிலும் தெரிவிக்கப்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com