கரூர் செல்ல தடையில்லை - முதலமைச்சர் விஜய்க்கு எதிரான திமுக மனு தள்ளுபடி

சுப்ரீம் கோர்ட்டின் இந்த உத்தரவை தொடர்ந்து முதலமைச்சர் விஜய் வருகிற 10-ந்தேதி கரூர் செல்வதற்கு எந்த தடையும் ஏற்படவில்லை.
CM Vijay
Published on

முதலமைச்சர் விஜய் கரூர் செல்வதற்கு தடை விதிக்க வலியுறுத்தியும், அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவின் பேச்சு உள்நோக்கத்துடன் இருப்பதாகவும் குறிப்பிட்டு தி.மு.க. தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட இடையீட்டு மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது.

முதலமைச்சர் விஜய் சட்டமன்ற தேர்தலின்போது கரூரில் மேற்கொண்ட பிரசாரத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 41 பேர் பலியான சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடைபெற்று வருகிறது.

பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை அப்போது பாதுகாப்பு காரணங்களால் விஜய் நேரில் சென்று சந்திக்க இயலவில்லை. அந்த குடும்பத்தினரை சென்னைக்கு வரவழைத்து அவர் ஆறுதல் தெரிவித்தார். அப்போது உங்களுக்கு எப்போதும் ஆறுதலாகவும், துணையாகவும் இருப்பேன் என்று முதலமைச்சர் விஜய் கூறி இருந்தார்.

கரூர் செல்லும் முதலமைச்சர் விஜய்

கரூரில் உயிர் இழந்தவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க உத்தரவிட்டுள்ள முதலமைச்சர் விஜய் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக வருகிற 10-ந்தேதி கரூருக்கு செல்கிறார். இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இதற்கிடையே அமைச்சர் ஆதவ் அர்ஜூனா கரூர் சம்பவத்தை குறிப்பிட்டு சில கருத்துக்களை தெரிவித்து இருந்தார்.

சிபிஐ விசாரணை

கரூர் சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை ஓய்வு பெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையில் நடைபெற்ற நிலையில் இந்த வழக்கு விசாரணைக்காக டெல்லியில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்திலும் விஜய் 2 முறை ஆஜராகி இருக்கிறார்.

இந்த நிலையில் முதலமைச்சர் விஜய் கரூர் செல்வதற்கு தடை விதிக்க வலியுறுத்தியும், அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவின் பேச்சு உள்நோக்கத்துடன் இருப்பதாகவும் குறிப்பிட்டு தி.மு.க. தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சார்பில் வக்கீல் அனுராதா அற்புதம் தாக்கல் செய்த அந்த மனுவில் முதலமைச்சர் விஜய் கரூர் செல்வது சி.பி.ஐ. விசாரணையை பாதிக்கக் கூடும். எனவே விசாரணை முடியும்வரை முதலமைச்சர் விஜய் மற்றும் அமைச்சர்கள் பொதுவெளியில் கருத்து தெரிவிக்க தடை விதிக்க வேண்டும்.

அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவின் பேச்சு பற்றி விசாரணை நடத்த சி.பி.ஐ.க்கு உத்தரவிட வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகள் இடம் பெற்று இருந்தன.

சுப்ரீம் கோர்ட்டு விசாரணை

இந்த மனு சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் கே.வி.விஸ்வநாதன் மற்றும் அலோக் ஆரேதே ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று அவசர வழக்காக பட்டியலிடப்பட்டு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அப்போது, தி.மு.க. சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் ரஞ்சித் குமார், கரூர் உயிரிழப்பு விவகாரத்தில் மக்களிடையே ஒரு கருத்தை திணிக்க முயற்சி நடக்கிறது என்றும், கரூர் உயிரிழப்பு விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நிலுவையில் இருக்கும்போது அது தொடர்பாக கருத்துக்களை அமைச்சர்கள் பொது வெளியில் தெரிவித்து வருகிறார்கள் என்று வாதிட்டார்.

கரூர் துயரம்

சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை மீறி அவதூறு இவ்விவகாரத்தில் பரப்பப்பட்டு வருகிறது என்றும் எனவே இந்த விவகாரத்தை பொருத்தவரை வழக்கு விசாரணையில் உள்ள போது பொதுவெளியில் வெவ்வேறு கருத்துக்களை பரப்பும் நபர்கள் மீது சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தார்.

மேலும் கரூர் துயர சம்பவத்தில் சம்பந்தப்பட்டிருக்கக்கூடிய முதலமைச்சர் விஜய் உள்ளிட்ட நபர்கள் நிவாரணங்களை வழங்குவது போன்ற பல்வேறு விஷயங்களை செய்கிறார்கள். ஊடகங்களுக்கு வெளிப்படையாகவே பேட்டிகளை வழங்குகிறார்கள். இதையெல்லாம் கட்டுப்படுத்த வேண்டும் என வாதாடினார்.

திமுக ஆட்சி

அப்போது, சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் தி.மு.க. வக்கீலை பார்த்து பல்வேறு கேள்விகளை எழுப்பினார்கள்.

முதலமைச்சருக்கு நிர்வாக ரீதியிலான உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்க்கிறீர்களா? முதலமைச்சர் விஜய் குற்றம்சாட்டப்பட்ட நபர் என எப்படி உங்களால் கூற முடியும்? தி.மு.க. ஆட்சியில் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையில் கூட விஜய் குற்றம் சாட்டப்பட்ட நபராக சேர்க்கப்படவில்லையே ? எனவே தயவு செய்து ஆவணங்களை சரியாக படித்து பார்த்துவிட்டு நீதிமன்றத்தில் பேசுங்கள் என நீதிபதிகள் காட்டமாக தெரிவித்தனர்.

மேலும் சுப்ரீம் கோர்ட்டு விசாரித்து வரும் ஒரு வழக்கு நிலுவையில் உள்ளபோது அந்த வழக்கு தொடர்பாக சில கருத்துக்களை அமைச்சர்களோ அல்லது முதலமைச்சரோ தெரிவித்தால் அதற்கு சி.பி.ஐ. விசாரணையை எப்படி நீங்கள் கேட்க முடியும்? அவ்வாறு கருத்துக்களை பொதுவெளியில் பரப்பி இருந்தாலும் அல்லது பேசி இருந்தாலும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தானே தொடர முடியும்? என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினார்கள்.

அரசியல் சண்டை

கரூர் உயிரிழப்பு விசயத்தில் உங்களுக்கு ஏதேனும் ஆட்சேபனை இருந்திருந்தால் அது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு அமைத்து உள்ள ஓய்வு பெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி குழுவிடம் தெரிவித்திருக்கலாமே என கருத்து தெரிவித்த நீதிபதிகள், கரூர் வழக்கில் முதலமைச்சர் விஜய்யை குற்றவாளி என்று கூறுவதை ஏற்க முடியாது என்று தெரிவித்தனர். மேலும் இந்த வழக்கை இப்போதே தள்ளுபடி செய்ய வேண்டி இருக்கும் என கூறியதோடு, உங்களுடைய அரசியல் சார்ந்த சண்டைகளை நீதிமன்றத்திற்கு வெளியே வைத்துக் கொள்ளுங்கள் எனவும் கண்டிப்புடன் தெரிவித்தனர்.

மனு தள்ளுபடி

இதனைத் தொடர்ந்து தி.மு.க. தரப்பு மூத்த வக்கீல் ரஞ்சித் குமார் நீதிபதிகளிடம் மனுவை வாபஸ் பெறுவதற்கான கோரிக்கையை வைத்தார். அதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் மனுவை வாபஸ் பெற அனுமதி அளித்து, தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். மேலும் இந்த வழக்கில் மனுவை சரியாக தயாரித்து தேவையான நிவாரணங்களை பெற்றுக் கொள்ளுங்கள் எனவும் தி.மு.க தரப்புக்கு நீதிபதிகள் அறிவுரை வழங்கினர்.

தடை இல்லை

சுப்ரீம் கோர்ட்டின் இந்த உத்தரவை தொடர்ந்து முதலமைச்சர் விஜய் வருகிற 10-ந்தேதி கரூர் செல்வதற்கு எந்த தடையும் ஏற்படவில்லை. திட்டமிட்டப்படி அவரது கரூர் பயணத்திற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. கரூர் பயணத்தின்போது பலத்த பாதுகாப்புக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com