உச்ச நீதிமன்ற நீதிபதி விசாரணை தேவை: உஜ்ஜைனி நில விவகாரத்தில் ம.பி முதலமைச்சருக்கு காங்கிரஸ் நெருக்கடி!

இந்தக் குற்றச்சாட்டுகள் முற்றிலும் அடிப்படையற்றவை என்று பாஜக திட்டவட்டமாக மறுத்துள்ளது.
MP Chief Minister over Ujjain land issue
Published on

மத்தியப் பிரதேச மாநிலத்தின் உஜ்ஜைனி பகுதியில் நடைபெற்றதாகக் கூறப்படும் நில மோசடிப் புகாரை அடிப்படையாகக் கொண்டு, முதலமைச்சர் மோகன் யாதவ் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது காங்கிரஸ் கட்சி கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது.

மத்தியப் பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ் 2023 டிசம்பரில் பதவியேற்ற பிறகு, அவரது குடும்பத்தினரும் அவர்களுக்குச் சொந்தமான ரியல் எஸ்டேட் நிறுவனங்களும் உஜ்ஜைனி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 168 ஏக்கர் நிலத்தை (சுமார் 137 பிளாட்டுகள்) ரூ.45 கோடி மதிப்பீட்டில் வாங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலங்கள் அனைத்தும், மாநில அரசு புதிய சாலைத் திட்டங்கள் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாடுகளை அறிவித்த அல்லது செயல்படுத்திய பகுதிகளுக்கு மிக அருகில் அமைந்துள்ளன. அரசு திட்டங்களால் இந்த நிலங்களின் மதிப்பு பல மடங்கு உயர்ந்துள்ளதால், இதில் "சுயநல முரண்பாடு" இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன. மொத்தமாக இக்குடும்பத்தினருக்கு அங்கு 335 ஏக்கர் நிலம் இருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், முதலமைச்சர் மோகன் யாதவ் உடனடியாகத் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்றும், உச்ச நீதிமன்றத்தின் அமர்வு நீதிபதி தலைமையில் இந்த நில விவகாரம் குறித்து விரிவான நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும்.

மேலும், மத்தியில் ஆளும் பாஜக அரசு, எதிர்க்கட்சித் தலைவர்கள் மீது மட்டும் ED மற்றும் CBI சோதனைகளை ஏவிவிடும் நிலையில், தங்கள் சொந்த முதலமைச்சர் மீதான இவ்வளவு பெரிய குற்றச்சாட்டுக்கு ஏன் அமைதியாக இருக்கிறது என்று மாநில காங்கிரஸ் தலைவர் ஜித்து பட்வாரி மற்றும் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் ஆகியோர் இந்த விவகாரத்தை "மகாகாலேஸ்வரர் நிலத்தின் கொள்ளை" என்று கூறி கடுமையாக விமர்சித்துள்ளனர்.

இந்நிலையில், இந்தக் குற்றச்சாட்டுகள் முற்றிலும் அடிப்படையற்றவை என்று பாஜக திட்டவட்டமாக மறுத்துள்ளது. இதுகுறித்து,

மாநில பாஜக தலைவர் ஹேமந்த் காண்டேல்வால், பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஒரு முதலமைச்சர் பதவியில் இருக்கும்போது, அவரைப் பலவீனப்படுத்தவே காங்கிரஸ் இத்தகைய போலிப் புகார்களைக் கிளப்புகிறது என்று கூறியுள்ளார்.

மோகன் யாதவ் முதலமைச்சராவதற்கு முன்பிருந்தே நீண்ட காலமாக ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டு வருபவர் என்பதால், அவரது குடும்பத்தினர் நிலம் வாங்குவது புதிய விஷயமல்ல என்றும், தேர்தல் பிரமாணப் பத்திரத்தில் அவரது சொத்து விவரங்கள் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளன என்றும் பாஜக தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், இந்த விவகாரத்தில் காங்கிரஸின் குற்றச்சாட்டுகளை நிராகரித்ததோடு, இது முதலமைச்சரை மாற்றுவதற்காக பாஜகவிற்குள் இருக்கும் உட்கட்சிப் பூசலால் கசியவிடப்பட்ட திட்டமிட்ட சதி என்று குறிப்பிட்டுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com