

டெல்லியின் புறநகர் பகுதியான நரேலா தொழிற்பேட்டையில் அமைந்துள்ள பிளாஸ்டிக் உற்பத்தி தொழிற்சாலையில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீ வேகமாக பரவியதால் தொழிற்சாலை முழுவதும் அடர்ந்த கரும்புகை சூழ்ந்தது. தகவல் அறிந்த தீயணைப்புத் துறையினர் தீயணைப்பு வாகனங்களுடன் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
தொழிற்சாலையில் சேமித்து வைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் மூலப்பொருட்கள், ரப்பர் மற்றும் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள் காரணமாக தீ வேகமாக பரவியதாக அதிகாரிகள் தெரிவித்தனர். பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக தொழிற்சாலை மற்றும் அருகிலுள்ள கட்டிடங்களில் இருந்தவர்கள் வெளியேற்றப்பட்டனர். இதுவரை உயிரிழப்பு ஏற்பட்டதாக தகவல் இல்லை. எனினும், தொழிற்சாலைக்கு பெரும் பொருளாதார சேதம் ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. இது தொடர்பாக போலீசார் வழக்குப்திவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
டெல்லியில் அடுத்தடுத்து நடக்கும் இந்த தீ விபத்துகள் அங்குள்ள பாதுகாப்பு குறைபாடுகளை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளன. மாளவியா நகர் கட்டிடத்தில் ஜன்னல்கள் முழுமையாக சீல் வைக்கப்பட்டிருந்ததாலும், அடித்தளத்தின் கதவு உட்புறமாக பூட்டப்பட்டிருந்ததாலும் புகையினால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு அதிகப்படியான உயிரிழப்புகள் நேரிட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. இதன் காரணமாகவே, தற்போது நரேலா பிளாஸ்டிக் தொழிற்சாலையில் ஏற்பட்டுள்ள தீ விபத்தை டெல்லி தீயணைப்புத் துறையினர் மிகவும் தீவிர கவனத்துடன் கையாண்டு வருகின்றனர்.