

மணிப்பூர் அனுபவிக்கும் தாங்க முடியாத வேதனை கற்பனைக்கு அப்பாற்பட்டது என மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கவலை தெரிவித்துள்ளார்.
2023 மே மாதம் இனக்கலவரம் வெடித்த மணிப்பூரில் இன்று வரை அமைதி திரும்பவில்லை.
வன்முறை தொடங்கியதில் இருந்து இதுவரை 260 பேர் உயிரிழந்ததுடன், 59,000க்கும் மேற்பட்டோர் இடம்பெயர்ந்துள்ளனர்.
அங்கு தன்னிச்சையாக செயல்பட்டு வரும் கிளர்ச்சிக் குழுக்கள் அவ்வப்போது தாக்குதல் நடத்தும் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.
மணிப்பூரில் மியான்மர் எல்லை அருகே நேற்று முன் தினம் குகி மற்றும் டாங்குல் நாகா சமூகத்தினர் வாழும் கிராமங்களில் நடந்த தனித்தனி சம்பவங்களில் குறைந்தது 29 வீடுகளுக்குத் தீ வைக்கப்பட்டன.
மியான்மர் எல்லையருகே உள்ள மணிப்பூரின் , புதன்கிழமையன்று அசாம் ரைபிள்ஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இதனால் அங்கு மீண்டும் கொந்தளிப்பான சூழல் நிலவி வரும் நிலையில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, மத்திய அரசு மணிப்பூருக்கு பாராமுகம் காட்டி வரும் போக்கை விமர்சித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
"மணிப்பூர் பல ஆண்டுகளாக எரிந்து கொண்டிருக்கிறது. இன்று, வெறுப்பு மற்றும் வன்முறையின் தீயில் மேலும் 20 வீடுகள் சாம்பலாகியுள்ளன.
இரட்டை இன்ஜின் அரசு இருந்தபோதிலும், குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்ட போதிலும், மோதல் தொடர்ந்து தீவிரமடைந்து வருகிறது.
ஆயிரக்கணக்கானோர் தங்கள் உயிரை இழந்துள்ளனர், எண்ணற்ற குடும்பங்கள் பேரழிவுக்கு உள்ளாகியுள்ளன. மணிப்பூர் அனுபவிக்கும் தாங்க முடியாத வேதனை கற்பனைக்கு அப்பாற்பட்டது.
மதம், சாதி, மொழி,அடையாளம் ஆகியவற்றின் அடிப்படையில் மக்களை ஒருவருக்கொருவர் எதிராக நிறுத்தும் மோடி அரசாங்கத்தின் பிளவுபடுத்தும் சித்தாந்தத்தின் விளைவே இது.
இன்று, மணிப்பூர் மட்டுமல்ல, ஒட்டுமொத்த தேசமும் பிரதமரிடமிருந்து ஒரு அனுதாப வார்த்தையைக் கூடக் கேட்கும் நம்பிக்கையை இழந்துவிட்டது. எந்தவொரு நடவடிக்கையையும் எதிர்பார்ப்பது என்பது நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று.
மணிப்பூர் ஒரு சிறந்த மாநிலமாக இருப்பதற்கு தகுதியானது. இந்தியாவை ஒன்றிணைப்பதே முன்னேறுவதற்கான ஒரே வழி." என குறிப்பிட்டுள்ளார்.