

இனப்படுகொலையில் ஈடுபடும் இஸ்ரேலுக்கு பிரதமர் மோடி வேண்டுமானால் விசுவாசமாக இருக்கலாம், ஆனால் இந்தியர்கள் அப்படியல்ல என காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
கடந்த மாதம் வெள்ளை மாளிகை செய்தியாளர் சந்திப்பில் பேசிய ஜே.டி. வான்ஸ், ஒருவேளை நான் இஸ்ரேல் அரசின் அமைச்சவரையில் இடம்பெற்றிருந்தால், உலகத்திலேயே அந்நாட்டுக்கு இருக்கும் ஒரே ஒரு சக்திவாய்ந்த கூட்டாளியை தாக்கி பேச மாட்டேன்" என கூறியிருந்தார்.
கடந்த மாதம் லெபனான் மீதான தாக்குதலில் ஏற்பட்ட முரண்பாடு உள்ளிட்டவற்றால் இஸ்ரேல் அமெரிக்காவை விமர்சிக்கும் தொனியை கைக்கொண்டதற்கு பதிலடியாக அவர் இதை கூறியிருந்தார்.
இந்நிலையில் அண்மையில் பாக்ஸ் நியூஸ் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு,
ஜே.டி வான்ஸ்-ஐ நான் மதிக்கிறேன். எங்களுக்குள் நல்ல உறவு உள்ளது.
ஆனால் அதனால் மட்டும் அவர் சொல்லும் எல்லாவற்றிலும் நான் உடன்பட வேண்டும் என்று அர்த்தம் கிடையாது. அமெரிக்காவில் இதுவரை இருந்த அதிபர்களிலேயே டிரம்ப் தான் எங்களில் சிறந்த நண்பர். அதில் மாற்றுக்கருத்து இல்லை.
ஆனால் எங்களுக்கு வேறு சில நண்பர்களும் உள்ளனர். குறிப்பாக இந்தியா. அந்நாட்டில் 1.4 பில்லியன் மக்கள் உள்ளனர். அங்கு எங்களுக்கு பேராதரவு உள்ளது. குறிப்பாக நான் பேஸ்புக்கை அதிகம் பயன்படுத்துபவன். அதில் இந்தியாவில் இருந்து எனக்கு ஆதரவுகள் வந்து குவிகின்றன." என தெரிவித்துள்ளார்.
சர்வதேச அளவில் தங்கள் மீதும் விமர்சனம் இருந்தாலும் இஸ்ரேலுக்கு இன்னும் பல நாடுகள் ஆதரவாகவே இருக்கின்றன. பல நாட்டு தலைவர்கள் என்னிடம் தனிப்பட்ட முறையில் தொடர்பு கொண்டு ஆதரவு தெரிவித்துள்ளனர் எனவும் அந்த பேட்டியில் நேதன்யாகு கூறியுள்ளார்.
இந்நிலையில் இதை குறிப்பிட்டு காங்கிரஸ் மாநிலங்களவை எம்.பி ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்டுள்ள எக்ஸ் பதவில்,
"அமெரிக்க அதிபர் ஜே.டி வான்ஸ், இஸ்ரேலுக்கு அமெரிக்காவை தவிர உலகில் சக்திவாய்ந்த கூட்டாளி யாரும் மிச்சம் இல்லை என கூறுகிறார்.
அதற்கு பதிலடி கொடுக்கும் இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு, அமெரிக்க துணை அதிபர் தவறாக புரிந்துகொண்டார். இஸ்ரேலுக்கு இந்தியாவின் ஏகபோக ஆதரவு இருக்கிறது என்று கூறுகிறார்.
நேதன்யாகு சொல்வது தவறு. இஸ்ரேல் மோதானி (மோடி - அதானி) சாமஜராஜ்யத்தில் இடம்பெற்றுள்ளது. நரேந்திர மோடி அதற்கு கண்மூடித்தமான விஸ்வாசத்துடன் உள்ளார் என்பதில் சந்தேகம் இல்லை.
ஆனால் கோடிக்கணக்கான இந்தியர்கள், காசாவில் குழந்தைகளை கூட விட்டுவைக்காமல் இஸ்ரேல் செய்யும் இனப்படுகொலையையும், ஆக்கிரமிக்கப்பட்ட மேற்கு கரையில் பாலஸ்தீனர்களை கட்டாய இடப்பெயர்வு செய்வதையும், தெற்கு லெபனானில் அதன் படுகொலைகளையும் கண்டிக்கின்றனர். இஸ்ரேல் செய்வது ஒட்டுமொத்த மனிதத்தின் மீதான தாக்குதல்.
தன்னைத்தானே கடவுள் என அறிவித்துக்கொண்ட விருதுப் பசியில் அலையும் விஸ்வகுரு, இஸ்ரேலின் செயல்கள் குறித்து மௌனம் காப்பது இந்திய நாகரிகத்தின் நன்மதிப்புகளுக்கும் நன்னெறிக்கும் செய்யும் பச்சைத் துரோகம். கொஞ்சமும் மனசாட்சியற்றத்தனம்.
நேதன்யாகுவிடம் இருந்து பதக்கம் பெறுவது கௌரவம் அல்ல. குறிப்பாக சர்வதேச அரங்கில் அவர் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் பிரதமர் மோடியின் வெள்ளை மாளிகை நண்பர் நேதன்யாகு மீது ஏமாற்றமும் கோபமும் அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது" என தெரிவித்துள்ளார்.