search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    கொரோனா பாதிப்பு உயர்வு- 6 மாநிலங்களில் கண்காணிப்பை தீவிரப்படுத்த மத்திய சுகாதாரத்துறை அறிவுரை
    X

    கொரோனா பாதிப்பு உயர்வு- 6 மாநிலங்களில் கண்காணிப்பை தீவிரப்படுத்த மத்திய சுகாதாரத்துறை அறிவுரை

    • கடந்த சில நாட்களாக மீண்டும் படிப்படியாக உயர்ந்து 4 மாதங்களில் இல்லாத அளவில் நேற்று 700-ஐ தாண்டியது.
    • அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்தவும், பரவலை தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    புதுடெல்லி:

    இந்தியாவில் கடந்த மாதம் வரை கொரோனா தினசரி பாதிப்பு 100-க்கும் குறைவாகவே இருந்தது.

    இந்நிலையில் கடந்த சில நாட்களாக மீண்டும் படிப்படியாக உயர்ந்து 4 மாதங்களில் இல்லாத அளவில் நேற்று 700-ஐ தாண்டியது.

    இதே போல தொற்று பாதிப்புக்காக ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கையும் ஆயிரத்திற்கும் கீழ் இருந்த நிலையில், படிப்படியாக உயர்ந்து தற்போது 5 ஆயிரத்தை நெருங்கி உள்ளது.

    மராட்டியம், கேரளா, கர்நாடகா, குஜராத், தெலுங்கானா, தமிழ்நாடு ஆகிய 6 மாநிலங்களில் கடந்த 2 வாரங்களாகவே கொரோனா பாதிப்பு படிப்படியாக உயர்ந்து புள்ளி விபரங்களில் தெரிய வந்துள்ளது.

    மராட்டியத்தில் மார்ச் 8-ந் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் பாதிப்பு 355-ஆக இருந்தது. ஆனால் அங்கு கடந்த 15-ந் தேதி வரையிலான ஒருவாரத்தில் பாதிப்பு 668-ஆக அதிகரித்துள்ளது. இதனால் வாராந்திர பாதிப்பு சதவீதம் 1.92-ஆக உயர்ந்துள்ளது. இது தேசிய சராசரி சதவீதமான 0.61 உடன் ஒப்பிடுகையில் மிக அதிகமாக உள்ளது.

    இதே போல கர்நாடகாவில் ஒரு வார பாதிப்பு மார்ச் 8-ந் தேதி நிலவரப்படி 493-ஆக இருந்தது. அங்கு 15-ந் தேதி நிலவரப்படி வாராந்திர பாதிப்பு 604-ஆக உயர்ந்துள்ளது.

    குஜராத்தில் ஒரு வார பாதிப்பு 105-ல் இருந்து 279-ஆகவும்,கேரளாவில் 434-ல் இருந்து 479-ஆகவும், தெலுங்கானாவில் 132-ல் இருந்து 267-ஆகவும், தமிழ்நாட்டில் 170-ல் இருந்து 258-ஆகவும் உயர்ந்துள்ளது.

    குறிப்பாக மராட்டியம், குஜராத், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், தமிழ்நாடு, கர்நாடகா, இமாச்சல பிரதேசம் மற்றும் ஜம்மு-காஷ்மீரில் உள்ள குறிப்பிட்ட 15 மாவட்டங்களில் சராசரி பாதிப்பு விகிதம் 5 சதவீதத்தில் இருந்து 10 சதவீதம் வரை உள்ளது.

    இதுதவிர உத்தரகாண்டில் உள்ள பிதோரகர் மாவட்டத்தில் பாதிப்பு 25 சதவீதம் அதிகரித்துள்ளது. மிசோரத்தில் உள்ள ஐஸ்பால் மாவட்டத்தில் பாதிப்பு 16.7 சதவீதமாகவும், இமாச்சலில் உள்ள மண்டி மாவட்டத்தில் 13 சதவீதம், சோலன் மாவட்டத்தில் 12.5 சதவீதம் மற்றும் குஜராத்தில் உள்ள கிர்சோம்நாத் மாவட்டத்தில் 11.8 சதவீதமாகவும் உள்ளது.

    ஏற்கனவே இன்புளுயன்சா காய்ச்சல் அதிகரித்து வரும் நிலையில், கொரோனா பாதிப்பும் உயர்ந்து வருவதால் கண்காணிப்பை தீவிரப்படுத்துமாறு அனைத்து மாநிலங்களையும் மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.

    குறிப்பாக தமிழ்நாடு, மராட்டியம், குஜராத், தெலுங்கானா, கேரளா, கர்நாடகா ஆகிய 6 மாநிலங்களின் தலைமை செயலாளர்களுக்கு மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூசன் ஒரு கடிதம் எழுதி உள்ளார்.

    அதில், அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்தவும், பரவலை தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும், நிலைமையை உன்னிப்பாக கவனித்து வர வேண்டும், மாவட்ட அளவில் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும், பரிசோதனை, கண்காணிப்பு, சிகிச்சை மற்றும் தடுப்பூசி போடுதல் என 5 வகை உத்திகளையும் பின்பற்ற வேண்டும். நெரிசலான இடங்களில் கொரோனா விதிகளை பின்பற்ற வேண்டும்.

    சர்வதேச பயணிகளிடம் இருந்து பெறப்பட்ட கொரோனா மாதிரிகளில் மரபணு வரிசைப்படுத்தும் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப் பட்டுள்ளது.

    Next Story
    ×