

மேற்கு வங்க மாநிலம் ஹால்டியாவில் உள்ள பிரபல ஹால்டியா பெட்ரோகெமிக்கல் சுத்திகரிப்பு ஆலை வளாகத்தில் இன்று அதிகாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
இதில் அங்கு பணியில் இருந்த தொழிலாளர்கள் 15 தொழிலாளர்களுக்கு கடுமையான தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளன.
அதிகாலை 4.00 மணி முதல் 4.30 மணி அளவில், ஹால்டியா பெட்ரோகெமிக்கல் சுத்திகரிப்பு நிலைய பகுதிக்கு அருகே உள்ள ரெயில் தண்டவாளங்களை ஒட்டியவாறு இருந்த ஒரு குழாயில் தீப்பற்றியுள்ளது.
அந்தப் குழாய் வழியாக கொண்டு செல்லப்பட்ட நாப்தா என்ற வேதிப்பொருள் திடீரென தீப்பற்றி எரிந்ததே இந்த விபத்திற்கு காரணம் எனக் கூறப்படுகிறது.
தீயின் சீற்றம் கடுமையாக இருந்ததால் அதனருகே பணியில் இருந்த தொழிலாளர்கள் பலரின் உடலில் தீக்காயங்கள் ஏற்பட்டன. குறைந்தது 15 பேர் இதில் படுகாயமடைந்ததாக கூறப்படுகிறது.
அவர்களின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த உள்ளூர் மக்கள் மற்றும் தொழிற்சாலை அதிகாரிகள் காயமடைந்தவர்களை மீட்டு ஹால்டியா மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அவர்களுள் சிலர் கவலைக்கிடமான நிலையில் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்பு படையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த விபத்து எப்படி, எதனால் ஏற்பட்டது என்பது குறித்துத் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என ஹால்டியா பெட்ரோகெமிக்கல் நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
தீ விபத்து ஏற்பட்ட பகுதி ஹால்டியா - மெச்செடா ரெயில் இணைப்புப் பாதைக்கு மிக அருகில் அமைந்துள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரெயில் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.