search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ஷிண்டேவின் பாதுகாப்பை அதிகரிக்க உத்தவ் தாக்கரே மறுத்தார்: அதிருப்தி அணியினர் குற்றச்சாட்டு
    X

    ஷிண்டேவின் பாதுகாப்பை அதிகரிக்க உத்தவ் தாக்கரே மறுத்தார்: அதிருப்தி அணியினர் குற்றச்சாட்டு

    • ஏக்நாத் ஷிண்டேவுக்கு இசட் பிளஸ் பிரிவு பாதுகாப்பு வழங்க உத்தவ் தாக்கரே மறுப்பு.
    • ஏக்நாத்ஷிண்டே பாதுகாப்பு தொடர்பான குற்றச்சாட்டில் எந்த உண்மையும் இல்லை.

    மும்பை :

    ஏக்நாத் ஷிண்டே, உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக சிவசேனாவில் அதிருப்தி அணியை உருவாக்கி உள்ளார். இந்தநிலையில் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் சுகாஸ் கண்டே, சாம்புராஜ் தேசாய் ஆகியோர் உத்தவ்தாக்கரே மீது பரபரப்பு குற்றச்சாட்டைதெரிவித்து உள்ளனர். இதில் நக்சலைட்டுகளால் உயிருக்கு அச்சுறுத்தல் இருந்த ஏக்நாத் ஷிண்டேவுக்கு இசட் பிளஸ் பிரிவு பாதுகாப்பு வழங்க உத்தவ் தாக்கரே மறுத்துவிட்டதாக கூறியுள்ளனர்.

    இதுகுறித்து முன்னாள் உள்துறை இணை மந்திரி சம்புராஜ் தேசாய் கூறுகையில், " ஏக்நாத் ஷிண்டேவுக்கு பாதுகாப்பை அதிகரிப்பது தொடர்பாக கூட்டம் நடக்க உள்ளதா என உத்தவ் தாக்கரேவிடம் இருந்து எனக்கு போன் வந்தது. நான், ஆமாம் கூட்டம் நடைபெற உள்ளது என்றேன். அப்போது ஏக்நாத் ஷிண்டேவின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட கூடாது என எனக்கு உத்தரவு வந்தது " என்றார். அதிருப்தி அணி எம்.எல்.ஏ.க்கள் உத்தவ் தாக்கரே மீது கூறிய இந்த குற்றச்சாட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இதற்கிடையே இந்த குற்றச்சாட்டை காங்கிரசை சேர்ந்த மற்றொரு முன்னாள் உள்துறை இணை மந்திரி சாதேஜ் பாட்டீல் மறுத்து உள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், " சாம்புராஜ் தேசாய் கூறுவது போல ஒரு கூட்டம் நடைபெறவே இல்லை. ஏக்நாத் ஷிண்டே சிவசேனாவை சேர்ந்தவர். அவருக்கு பாதுகாப்பு வழங்க முதல்-மந்திரி ஏன் மறுக்க போகிறார்?. கட்சிரோலி பொறுப்பு மந்திரி என்பதால் அவருக்கு ஏற்கனவே கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட்டு இருந்தது. எனவே ஏக்நாத்ஷிண்டே பாதுகாப்பு தொடர்பான குற்றச்சாட்டில் எந்த உண்மையும் இல்லை " என்றார்.

    மேலும் முன்னாள் உள்துறை மந்திரி திலீப் வல்சே பாட்டீல் கூறுகையில், "மகா விகாஸ் அகாடி ஆட்சியில் ஏக்நாத் ஷிண்டேக்கு போதிய பாதுகாப்பு வழங்கப்பட்டது. அவரது பாதுகாப்பை அதிகரிக்கக்கூடாது என உத்தவ் தாக்கரே ஒருபோதும் அறிவுறுத்தவில்லை. ஏக்நாத் ஷிண்டேக்கு மிரட்டல் கடிதம் வந்தபோது போலீசாருக்கு உரிய உத்தரவுகளை வழங்கியிருந்தேன். எனவே இந்த பிரச்சினை பற்றி விவாதிப்பது தேவையற்றது" என்றார்.

    Next Story
    ×