

எரிபொருள் பயன்பாட்டைக் குறைத்து, பொது போக்குவரத்தை பயன்படுத்த வேண்டும் என்ற பிரதமர் நரேந்திர மோடியின் வேண்டுகோளை தொடர்ந்து, மகாராஷ்டிர முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ் சிறப்பு விமானத்திற்கு பதிலாக வழக்கமான இண்டிகோ பயணிகள் விமானத்தில் புனேவில் இருந்து பெங்களூருவுக்கு பயணம் செய்தார்.
நேற்று விதான் பவனுக்கு இருசக்கர வாகனத்தில் சென்ற ஃபட்னாவிஸ், ஆர்ட் ஆஃப் லிவிங் நிகழ்வில் கலந்து கொள்வதற்காக புனேவில் இருந்து பெங்களூரு செல்லும் வழக்கமான இண்டிகோ வர்த்தக விமானத்தில் பயணம் செய்து, பொது போக்குவரத்தை ஊக்குவித்தார்.
முன்னதாக, ஃபட்னாவிஸ் தனது கார் வாகன அணிவகுப்பிற்குப் பதிலாக மோட்டார்சைக்கிள்களை பயன்படுத்த தொடங்கி, விதான் பவனுக்கு மோட்டார்சைக்கிளில் செல்லும் புகைப்படங்களை பகிர்ந்திருந்தார். புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டசபை உறுப்பினர்களின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்வதற்காக அவர் இந்த பயணத்தை மேற்கொண்டார்.
பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துவதன் மூலமும், தேவையற்ற வெளிநாட்டுப் பயணங்களை தவிர்ப்பதன் மூலமும், அத்தியாவசியமற்ற தங்கம் வாங்குவதை தவிர்ப்பதன் மூலமும், பெட்ரோல், டீசல் மற்றும் அந்நிய செலாவணி கையிருப்பை சேமிக்க நாட்டிற்கு உதவுமாறு பிரதமர் மோடி கடந்த ஞாயிற்றுக்கிழமை குடிமக்களை வலியுறுத்தி இருந்தார்.