'அரசியலமைப்பு படுகொலை தினம்': பிரதமர் மோடி மற்றும் தலைவர்கள் அஞ்சலி!

"சுதந்திரத்தின் மூலமே ஒரு மனிதன் மகிழ்ச்சியையும், மிக உயர்ந்த உன்னத நிலையையும் அடைகிறான்"
Constitution Murder Day- PM Modi
Published on

கடந்த 1975 ஜூன் 25 நள்ளிரவில், அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி தலைமையிலான காங்கிரஸ் அரசாங்கத்தின் பரிந்துரையின் பேரில், நாடு முழுவதும் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டது. 21 மாதங்கள் நீடித்த இந்த அவசரநிலை காலத்தில் குடிமக்களின் அடிப்படை உரிமைகள், பத்திரிகை சுதந்திரம் மற்றும் பேச்சுரிமை ஆகியவை முற்றிலுமாக நசுக்கப்பட்டன.

மக்களாட்சியின் இந்த இருண்ட அத்தியாயத்தை நினைவுகூறும் வகையிலும், ஜனநாயகத்தின் மாண்பைக் காத்த தியாகிகளை கௌரவிக்கும் வகையிலும் ஜூன் 25-ஆம் தேதியை 'அரசியலமைப்பு படுகொலை தினம்' என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

ஜனநாயகம் நசுக்கப்பட்ட இருண்ட காலம்:

அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டவுடன், நாட்டில் எதிர்க்கட்சித் தலைவர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் என ஆயிரக்கணக்கானோர் விசாரணையின்றி சிறையில் அடைக்கப்பட்டனர்.

நீதிமன்றங்களின் அதிகாரங்கள் கட்டுப்படுத்தப்பட்டு, ஒட்டுமொத்த தேசமும் ஒரு சர்வாதிகாரப் பிடிக்குள் தள்ளப்பட்டது. இந்த அடக்குமுறைகளுக்கு எதிராகப் போராடி தியாகம் செய்த பலரின் தியாகத்தால் மீண்டும் ஜனநாயகம் மீட்டெடுக்கப்பட்டது.

இதுதொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில்:"அரசியலமைப்பு படுகொலை தினம், இந்திய ஜனநாயகம் கொடூரமாக நசுக்கப்பட்ட அந்த இருண்ட காலத்தை இன்று நமக்கு நினைவூட்டுகிறது.

ஜனநாயகம், அரசியலமைப்பு மற்றும் குடிமக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதில் நாம் எப்போதும் அர்ப்பணிப்புடன் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தை இது நமக்கு ஊட்டுகிறது. அவசரநிலையை துணிச்சலுடன் எதிர்த்த அனைத்து சான்றோர்களுக்கும் எனது மரியாதைக்குரிய வணக்கங்கள்."

மேலும், சுதந்திரத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில், "சுதந்திரத்தின் மூலமே ஒரு மனிதன் மகிழ்ச்சியையும், மிக உயர்ந்த உன்னத நிலையையும் அடைகிறான். சுதந்திரமே ஒருவருக்கு முழுமையையும் உச்சகட்ட உன்னதத்தையும் வழங்குகிறது" என்றும் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்ட மூத்த தலைவர்கள், காங்கிரஸ் கட்சியின் அதிகாரப் பசியால் அன்று அரசியலமைப்பின் ஆன்மா சிதைக்கப்பட்டது என்று கடுமையாக விமர்சித்துள்ளனர்.

வருங்கால சந்ததியினர் இந்த வரலாற்றுப் பிழையை மறந்துவிடக் கூடாது என்பதற்காகவும், மீண்டும் இது போன்றதொரு ஜனநாக விரோதச் செயல் நாட்டில் அரங்கேறாமல் இருப்பதை உறுதி செய்யவுமே இந்த நாள் அனுசரிக்கப்படுவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com