search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    அமலாக்கத்துறை, சிபிஐ அமைப்புகளை பயன்படுத்தி நன்கொடை வசூலிக்கும் பா.ஜ.க: காங்கிரஸ் தாக்கு
    X

    அமலாக்கத்துறை, சிபிஐ அமைப்புகளை பயன்படுத்தி நன்கொடை வசூலிக்கும் பா.ஜ.க: காங்கிரஸ் தாக்கு

    • மத்திய புலனாய்வு அமைப்புகள் சுமார் 30 நிறுவனங்களில் சோதனை நடத்தியுள்ளன.
    • சோதனைக்கு பின் பல நிறுவனங்கள் பா.ஜ.க.வுக்கு நன்கொடை வழங்கியிருப்பதாக காங்கிரஸ் தெரிவித்தது.

    புதுடெல்லி:

    காங்கிரஸ் அமைப்பு பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் நிதி மந்திரி நிர்மலா சீதாராமனுக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில் கூறியுள்ளதாவது:

    அமலாக்கத்துறை, வருமான வரித்துறை மற்றும் சி.பி.ஐ. ஆகிய மத்திய புலனாய்வு அமைப்புகளின் விசாரணையை எதிர்கொண்ட பிறகு, பல தனியார் நிறுவனங்கள் பா.ஜ.க.வுக்கு நன்கொடை வழங்கியிருப்பதாக பல்வேறு ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

    இது மத்திய புலனாய்வு அமைப்புகளின் சுதந்திரம், தன்னாட்சி மற்றும் செயல்பாடுகள் குறித்து தீவிரமான கேள்விகளை எழுப்புகிறது. இந்த 3 புலனாய்வு அமைப்புகளில் 2 அமைப்புகள் மத்திய நிதி அமைச்சகத்தின் அதிகார வரம்பிற்கு உட்பட்டவை.

    பா.ஜ.க. அரசாங்கத்தால் புலனாய்வு அமைப்புகள் எவ்வாறு கட்டுப்படுத்தப்படுகின்றன என்பது முழு தேசத்திற்கும் தெரியும். 2014-ம் ஆண்டிலிருந்து அரசியல்வாதிகளுக்கு எதிரான அமலாக்கத்துறை வழக்குகள் 4 மடங்கு அதிகரித்துள்ளன. இதில் 95 சதவீத வழக்குகள் எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு எதிராக உள்ளன.

    பா.ஜ.க.வுக்கு மொத்தம் ரூ.187.58 கோடி வழங்கிய 30 நிறுவனங்களில் 23 நிறுவனங்கள், 2014 முதல் சோதனை நடந்த ஆண்டு வரை பா.ஜ.க.வுக்கு எந்த நன்கொடையும் வழங்கியிருக்கவில்லை. ஆனால் அதன்பிறகு நன்கொடை வழங்கியுள்ளன. ஏற்கனவே நன்கொடை வழங்கி வந்த நிறுவனங்கள், சோதனைக்குப் பிறகு அதிக தொகையை நன்கொடையாக வழங்கியுள்ளன.

    விசாரணை அமைப்புகளால் பதிவுசெய்யப்பட்ட வழக்குகள் சட்டவிரோதமானது என நாங்கள் கூறவில்லை. விசாரணையை எதிர்கொண்ட பின் இந்த நிறுவனங்கள் ஏன் பா.ஜ.க.வுக்கு நன்கொடை வழங்குகின்றன என்பது விசாரிக்கப்பட வேண்டிய விவகாரம் ஆகும். அமலாக்கத்துறை நடவடிக்கைக்குப் பிறகு அவர்கள் பா.ஜ.க.வுக்கு நன்கொடை அளிப்பது வெறும் தற்செயலானதா?

    இந்த விவகாரத்தை நாங்கள் நீதித்துறையிடமும், மக்களிடமும் கொண்டு செல்வோம். இரு இடங்களிலும் நாங்கள் உங்களைத் தோற்கடிப்போம் என தெரிவித்துள்ளார்.

    இதேபோல், தலைநகர் டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில், பா.ஜ.க. தனது நிதி ஆதாரங்கள் தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். அப்படி இல்லையெனில் சுப்ரீம் கோர்ட் கண்காணிப்பின் கீழ் இந்த நன்கொடைகள் குறித்த விசாரணைக்கு உடன்பட வேண்டும் என்றார்.

    Next Story
    ×