

அசாம் மாநிலத்தின் 126 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் வரும் ஏப்ரல் 9 அன்று வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. ஏற்கனவே ஆட்சியில் உள்ள பாஜகவுக்கும் காங்கிரசுக்கும் இடையில் கடும் போட்டி நிலவுகிறது.
அங்கு இறுதிக்கட்ட பிரசாரம் இன்று மாலையுடன் நிறைவடைந்தது. இதற்கிடையே அசாம் முதல்வர் ஹிமாந்தா பிஸ்வா சர்மா மனைவி குறித்த சர்ச்சை பூதாகரமாக வெடித்து வார்த்தை போர் ஏற்பட்டுள்ளது.
காங்கிரஸ் தலைவர்கள் பவன் கேரா, கௌரவ் கோகோய் அண்மையில் செய்தியாளர்கள் சந்திப்பை ஏற்பாடு செய்து சில ஆவணங்களை வெளியிட்டனர்.
அதில்,"அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மாவின் மனைவி ரினிகி புயன் சர்மா, இந்தியா தவிர ஐக்கிய அரபு அமீரகம், எகிப்து ஆகிய நாடுகளின் பாஸ்போர்ட் வைத்திருக்கிறார். துபாய் கோல்டன் விசா வைத்திருக்கிறார்.
இந்தியச் சட்டப்படி ஒருவர் இரண்டு நாடுகளின் குடியுரிமை அல்லது பாஸ்போர்ட்டை வைத்திருக்க முடியாது. முஸ்லிம்களுக்கு எதிரான அரசியலை முன்னெடுக்கும் ஹிமந்தாவின் மனைவி, எப்படி இரண்டு முஸ்லிம் நாடுகளின் பாஸ்போர்ட் வைத்திருக்கிறார்? அவருக்கு இரட்டைக் குடியுரிமை உள்ளதா?
இது குறித்து மத்திய உள்துறை அமைச்சருக்குத் தெரியுமா? மேலும், ஹிமந்தா பிஸ்வா சர்மா தனது தேர்தல் பிரமாணப் பத்திரத்தில் துபாய் மற்றும் அமெரிக்காவில் உள்ள தனது சொத்துக்களை மறைத்துவிட்டார்." என்று தெரிவித்தனர்.
இந்த குற்றச்சாட்டு விவாதப்பொருளான நிலையில் காங்கிரசின் குற்றச்சாட்டுகளை ஹிமந்தா பிஸ்வா சர்மா மறுத்துள்ளார்.
இது தொடர்பாக பேசிய ஹிமந்தா பிஸ்வா சர்மா, ``காங்கிரஸ் கட்சியினர் காட்டிய பாஸ்போர்ட்கள் ஏஐ போட்டோஷாப் மூலம் தயாரிக்கப்பட்டவை. பாகிஸ்தானில் வாட்ஸ்சப் கணக்கில் 'திப்பு சுல்தான்' என்பவரால் பதிவேற்றப்பட்ட ஆவணங்களை எடுத்து, அதில் எனது மனைவியின் புகைப்படத்தை இணைத்து மோசடி செய்திருக்கின்றனர். துபாய் கோல்டன் விசா விவகாரத்தில், அது போலியானது என்பதை அந்த நாட்டு அரசாங்க இணையதளம் மற்றும் இந்திய அரசும் உறுதி செய்துள்ளது. எகிப்திய பாஸ்போர்ட் போலியானது என்பதை Google Reverse Search மூலம் எளிதாகக் கண்டறியலாம்.
பொதுமக்களின் கருத்தைத் தவறாக வழிநடத்தப் போலி ஆவணங்களைப் பயன்படுத்துவது கடுமையான குற்றம். இந்தக் குற்றச்சாட்டுகளுக்காக பவன் கேரா மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.
தேர்தல் முடிவுகளைப் பாதிக்க இத்தகைய செயல்களில் ஈடுபடுவோருக்கு ஆயுள் தண்டனை வரை கிடைக்க வாய்ப்புள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதிலிருந்து பாகிஸ்தானிய ஊடகங்கள் திட்டமிட்டு காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாகச் செயல்படுகின்றன" என்று தெரிவித்துள்ளார்.