அசாமில் பா.ஜ.க. ஹாட்ரிக் வெற்றி பெறும்..!- பிரதமர் மோடி நம்பிக்கை

அசாமின் தனித்துவத்தை பாதுகாக்க பொது சிவில் சட்டத்தை பா.ஜ.க. அமல்படுத்தும்.
அசாமில் பா.ஜ.க. ஹாட்ரிக் வெற்றி பெறும்..!- பிரதமர் மோடி நம்பிக்கை
Published on

அசாம் மாநிலத்தில் ஒரே கட்டமாக வருகிற 9-ந் தேதி சட்டசபை தேர்தல் நடக்கிறது. அங்கு ஆளும் பா.ஜ.க ஆட்சியை தக்க வைத்துக் கொள்ளும் ஆர்வத்திலும், 10 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியை பிடிக்கும் வேட்கையில் காங்கிரஸ் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன.

அசாம் மாநிலத்தில் இன்று பிரதமர் மோடி பா.ஜ.க வேட்பாளர்களை ஆதரித்து 2 இடங்களில் பிரசாரம் செய்தார்.

தேமாஜி மாவட்டம் கோகாமுக்கில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:-

அசாம் தேர்தல் அறிவிப்பு வெளியான பிறகு இதுவே எனது முதல் பொதுக் கூட்டம் ஆகும். இங்கு மக்கள் திரண்டு வந்து உற்சாகம் அளிக்கிறார்கள்.

உங்கள் அனைவருடைய ஆசியுடனும் பிரதமராக பொறுப்பேற்றதில் ஹாட்ரிக் சாதனை படைக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. இதேபோல உங்கள் ஆசியுடனும் அசாமில் பா.ஜ.க ஹாட்ரிக் வெற்றியை பெறும்.

முதலில் சர்பானந்தா சோனோவால் தலைமையிலும், பின்னர் ஹிமந்தா பிஸ்வா தலைமையிலும் கடந்த 10 ஆண்டுகளில் அசாம் மாநில மக்களுக்கு நல்லாட்சியை பா.ஜ.க கொடுத்துள்ளது. அசாம் சட்டசபை தேர்தல் மாநிலத்தை கட்டமைப்பதற்கான தேர்தல் ஆகும்.

பா.ஜ.க. கூட்டணி அரசு 3-வது முறையாக ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்ய தயாராக உள்ளது.

அதே நேரத்தில் காங்கிரஸ் கட்சியோ தொடர்ச்சியாக 3 தோல்விகளை சந்திக்க தயாராக உள்ளது. காங்கிரசின் இளவரசர் தோல்விகளில் ஒரு சதத்தை (100) எட்ட தயாராக இருக்கிறார்.

அசாம் பா.ஜ.க. நேற்று ஒரு சிறப்பான தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. பெண்களின் கண்ணியம், மரியாதை, பாதுகாப்பு ஆகியவற்றை உறுதிப்படுத்தும் வகையில் முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.

கடந்த 10 ஆண்டுகளில் அசாமில் 22 லட்சத்துக்கு மேற்பட்ட ஏழை குடும்பங் களுக்கு நிரந்தர வீடுகள் வழங்கப்பட்டுள்ளன.

அசாமின் தனித்துவத்தை பாதுகாக்க பொது சிவில் சட்டத்தை பா.ஜ.க. அமல்படுத்தும். அதேவேளை பழங்குடியினரின் உரிமையையும் பாதுகாக்கும்.

சுபன்சிரி நீர் மின் திட்டம் அசாம் மாநிலத்தை வெள்ளப் பாதிப்பில் இருந்து பாதுகாக்கும்.

அசாமில் நவீன உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்க பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியால் மட்டுமே முடியும் என்று அனைவரும் கூறுகின்றனர்.

ஊடுருவியவர்களை ஆதரித்து அவர்களை தங்களது வாக்கு வங்கியாக காங்கிரஸ் பயன்படுத்துகிறது. இதன் மூலம் அந்த கட்சி சமூகத்தை பிளவுபடுத்துகிறது. இந்தியாவை பிரிக்க முயற்சி செய்கிறது.

அசாமிற்கு நீடித்த அமைதிக்கான ஒரு பாதையை இரட்டை என்ஜின் அரசு வகுத்து காட்டியது. கடந்த 10 ஆண்டுகளில் ஆயிரக்கணக் கானோர் துப்பாக்கிகளை கீழே போட்டுவிட்டு ஒரு புதிய எதிர்காலத்துடன் தங்களை இணைத்து கொண்டுள்ளனர்.

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com